இலங்கையில் இன்றையதினம் மாபெரும் போராட்டம் முன்னெடுக்க இருந்த நிலையில் அதனை தடுக்க அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று போராட்டம் இடம்பெறப்போவதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நிறுத்தும் முகமாக நேற்று மாலை 6மணி தொடக்கம் நாளை காலை 6மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அவ் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்களும் எதிர்க் கட்சி அரசியல் பிரமுகர்களும் கொழும்பில் போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டத்தை நிறுத்த பொலிஸாரும் இராணுவ படையினரும் மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
அத்துடன் இணையதளங்களை முடக்கி அதன்மூலம் மக்களைத் திசைதிருப்ப அரசாங்கம் முயன்றது. இம்முயற்சியும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கிறது.
இவ்வளவு காலமும் பொறுமை காத்து வந்த மக்கள் இன்று அதனை இழந்து அரசை ஆட்டம் காணவைத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் இப்போது விபிஎன் பயன்படுத்துவதைப் போலவே அனைவராலும் பயன்படுத்த முடியும்.
இத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காகச் சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என இன்று காலை நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றைப் பதிவிட்டிருந்தார்.
இவ்வாறு சமூக வலைத்தள முடக்கத்துக்கு வந்த எதிர்ப்புகளை தொடர்ந்து முடக்கப்பட்டிருந்த சமூக ஊடகங்கள் இன்று பிற்பகல் 3.30க்கு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.