கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield) ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் உள்ளடக்கமும் கொரோனா வைரஸ் தான்.
பெரும்பாலும் எந்த ஒரு நோயிற்கான தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுவது அந்த நோயை உண்டாக்கும் நோய்க் கிருமியே ஆகும். அதாவது அந்த நோய்க்கிருமியின் நோய் உண்டாக்கும் திறனை மட்டுப்படுத்தியோ, அல்லது நீக்கியோ, அந்த நோய்க்கிருமியால் உண்டாகும் நோய்க்கு, அந்த நோய்க்கிருமியே தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் நோய்க்கிருமிகள் கொல்லப்பட்டோ அல்லது செயலிழக்க வைக்கப்பட்டோ (Inactivated) தான் பயன்படுத்தப்படுகிறது. எனவே தடுப்பூசியினால் நமக்கு நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை. மாறாக தடுப்பூசிகள் நமது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அந்த நோய்க்கு எதிராக அதிகரிக்க வைக்கின்றன. முதலில் தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது என்பது புரிந்தால் தான் அது எப்படி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க செய்கிறது என்று விளங்கும்.
தடுப்பூசிகள் எவ்வாறு வேலை செய்கின்றன?
சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்குகிறேன். எந்த ஒரு நோய்க்கிருமி நமது உடலில் நுழைந்தாலும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune system) அந்த நோய்க்கிருமி ஒரு அந்நியப் பொருள் என்று அடையாளம் கண்டு கொள்ளும். உடனடியாக அந்த அந்நிய நோய்க்கிருமியைத் தாக்கி அழிக்கும் வேலையை ஆரம்பிக்கும். இதன் விளைவு தான் நோயின் போது நமக்கு ஏற்படும் காய்ச்சல். நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நமது உடலில் நுழைந்த நோய்க்கிருமியை முற்றிலும் அழித்தப் பின் நாமும் காய்ச்சல் நீங்கி நலம் பெறுவோம்.
இந்த நோய் எதிர்ப்பு செயல்பாடுகள் அனைத்தும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவு செல்களின் (Memory cells) மூலம் நினைவில் நிறுத்திக் கொள்ளப்படும். அந்த நோய்க்கிருமியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் இந்த நினைவு செல்களில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். மீண்டும் நமது உடலில் அதே நோய்க்கிருமி நுழைந்தால், இந்த நினைவு செல்கள் உடனடியாக அந்த நோய்க்கிருமி இருக்கும் இடத்திற்கு, அழிக்கும் செல்களை (Killer cells) அனுப்பி, அந்த நோய்க்கிருமியை அழிக்கும். இப்படி இயற்கையாக, ஒரு நோய்க் கிருமிக்கு எதிராக நாம் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியே, பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் (Acquired immunity) என்று அழைக்கப்படுகிறது.
இப்படி இயற்கையாக நமக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை செயற்கையாகத் தூண்டிப் பெறுவதற்கு உதவுவதே தடுப்பூசிகள் ஆகும். அதாவது நோய் உண்டாக்கும் திறன் மட்டுப்படுத்தப்பட்ட அல்லது நீக்கப்பட்ட நோய்க்கிருமியை உள்ளடக்கிய தடுப்பு மருந்து நமது உடலில் செலுத்தப்பட்ட உடன், நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த நோய்க்கிருமியை கண்டறிந்து அதை அழிக்கும் வேலையை ஆரம்பிக்கும். இதன் விளைவுதான் தடுப்பூசி எடுத்துக் கொண்ட அன்று நமக்கு ஏற்படும் காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றுக்கான காரணம்.
இவ்வாறு, அந்த நோய்க்கிருமியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தடுப்பூசியின் மூலம், நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் நினைவு செல்களில் பதிய வைக்கப்பட்டு விடும். இதன் காரணமாக நமது உடல் உண்மையான நோய்க் கிருமியின் தொற்றுக்கு ஆளாகும் போது தடுப்பூசியின் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலால் அந்த நோய்க்கிருமி அழிக்கப்பட்டு விடும். இதன் மூலம் அந்த நோய்க்கிருமியினால் ஏற்படும் நோய்க்கு ஆளாகாமலேயே நாம், அந்த நோய்க்கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை தடுப்பூசியினால் பெறுவோம். சரி, இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டைப் பற்றிப் பார்ப்போம்.
கோவாக்சின்
கோவாக்சின் தடுப்பு மருந்து, பாரத் பயோடெக் நிறுவனத்தால் (Bharat Biotech international Ltd), இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (National Institute of Virology) ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
கோவாக்சின் தடுப்பு மருந்தில், முழுமையான கொரோனா வைரஸ் செயலிழக்க வைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
கோவிஷீல்ட்
கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, ஆக்ஸ்ஃபோர்ட்-ஆஸ்ட்ரா ஸெனெகா (Oxford-AstraZeneca) எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் இந்திய சீரம் நிறுவனத்தால் (Serum Institute of India) உற்பத்தி செய்யப்படுகிறது.
கோவிஷீல்ட் தடுப்பு மருந்தில், கொரோனா வைரசின் ஒரு முக்கிய பாகமான முள் புரதத்தை (Spike protein) மட்டும் எடுத்து சிம்பன்சி குரங்குகளில் காணப்படும் அடினோ வைரஸ் (AdenoVirus) எனப்படும் வைரசுடன் குளோனிங் (Cloning) முறையில் இணைத்து பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா வைரசின் மேல் முள் முள்ளாகத் தோன்றும் பாகம் தான் முள் புரதமாகும். இந்த முள் புரதம் தான் மனித செல்லுடன் கொரோனா வைரஸ் பிணைப்பு ஏற்படுத்த உதவும் முக்கிய காரணியாகும். இந்த முள் புரதத்தை நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தடுப்பூசியினால் அடையாளம் காட்டுவதன் மூலம் நாம் கொரோனா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பைப் பெறலாம். இதுவே கோவிஷீல்டின் செயல்படும் முறையாகும்.
டோஸ் (Dose)
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே இரண்டு தவணையாகப் போடப்படுகிறது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் இரண்டுமே செயலிழக்க வைக்கப்பட்ட கொரோனா வைரஸைக் கொண்டுள்ளதால், அதன் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பாற்றல் மிக நீண்டக் காலத்திற்கு நீடிப்பதற்காகத் தான் இரண்டு தவணையாக தடுப்பூசி போடப்படுகிறது.
செயல்திறன்
சமீபத்திய ஆய்வின் படி கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 81% ஆகவும், கோவிஷீல்டின் செயல்திறன் 90% ஆகவும் உள்ளது.
கோராவாசிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் !
கொரோனா பெருந்தொற்று மூன்றாம் அலை, நான்காம் அலை என்று நீண்டு கொண்டே செல்லாமல் இருக்க நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் அவசியம். தடுப்பூசியைப் பற்றிய அவநம்பிக்கை, தேவையற்ற பயம் ஆகியவற்றைப் புறம் தள்ளிவிட்டு நாம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். நாம் போட்டுக் கொண்டதோடு நிற்காமல் நமது குடும்ப உறுப்பினர்களையும் அவசியம் போட்டுக்கொள்ள செய்ய வேண்டும். ஏதேனும் மருத்துவ சிக்கல்கள், உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து விட்டு பின்னர் அவர் அறிவுரையின் படி போட்டுக் கொள்ளலாம். மற்றபடி, எந்த விதமான மருத்துவ சிக்கல்களும், உடல் நலக் குறைபாடுகளும் இல்லாத ஆரோக்கியமான நபர்கள் எந்தவிதமான தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் அரசால் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்வோம் !
கொரோனா எனும் கொடிய நோயை வெல்வோம் !