கோயிலிற்கு வேஸ்டி, புடவை அணிந்து செல்வதால் ஏற்படும் பலன்கள் என்ன?
இறை வழிபாட்டுடன் எதனையும் தொடங்குவது நம் மதத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். நமது பாரம்பரிய பழக்க, வழக்கங்கள் எல்லாமே சாதாரண நிலையில் வாழும் மக்கள் பயன்பெற ஒருவகையான விஞ்ஞான அடிப்படையில் உண்டாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில் ஆலயத்திற்கு எப்படி பட்ட உடைகளை அணிந்து செல்வதால் எத்தகைய நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி நமது சாத்திரங்கள் கூறியுள்ளன. அவற்றை பற்றி இங்கு விரிவாக அறிந்து கொள்வோம்.
கோவில்களுக்கு செல்லும் போது துவைக்கப்பட்ட ஆடைகளையே அணிந்து செல்ல வேண்டும். அழுக்கான ஆடைகளை அணிந்து கொண்டு செல்லக் கூடாது. “பட்டு ஆடைகள்” உடலின் காந்த சக்தி அதிகம் வெளியேறாமல் காக்கும் தன்மை கொண்டது. இல்லற வாழ்வில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பட்டு ஆடைகளை அதிகம் உடுத்தலாம். துறவிகள் மற்றும் யோக வாழ்வு மேற்கொள்பவர்கள் பட்டு உடைகளை தவிர்க்க வேண்டும். ஆன்மீக வாழ்வு மேற்கொள்பவர்கள் “பருத்தி” உடைகளையே அதிகம் பயன்படுத்த வேண்டும். பருத்தி உடைகள் அணிபவர்களுக்கு உடல் மற்றும் மன பாரங்கள் குறைந்தது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும். மனதை அமைதிப்படுத்தும்.
கோவில் குடமுழுக்கு மற்றும் பிற திருவிழாக்களின் போது பெண்கள் புதிய பட்டு புடவைகள் அணிந்து செல்வது சிறந்ததாகும். ஏனெனில் கோவில் குடமுழுக்கு நடக்கும் பொழுது செய்யப்படும் யாகங்கள், மந்திர உச்சாடனங்கள், கோவில் கும்பத்திற்கு குடமுழுக்கு செய்த பின்பு பக்தர்களின் மீது தெளிக்கப்படும் தீர்த்தம் போன்றவை இறை சக்தி அதிகம் கொண்டவையாகும். இத்தகைய நன்மையான ஆற்றல்களை அந்த பட்டு உடைகள் கிரகித்து, அதை உடுத்துபவர்களுக்கு உடலிலும், மனத்திலும் ஒருவகையான உற்சாகமான சக்தியை கொடுக்கும். இந்த விதி 100% தூய்மையான பட்டு ஆடைகளுக்கே பொருந்தும்.
கோவில்களுக்கு பொதுவாக ஆண்கள் வேட்டி சட்டையிலும், பெண்கள் புடவையிலும் செல்வது சாலச் சிறந்தது ஆகும். ஏனெனில் நவீன மேற்கத்திய பாணி உடைகளான பேன்ட் எனப்படும் முழுக்கால் சட்டைகள், மேல்சட்டைகள், பனியன்கள் போன்ற உடைகள் வெட்டி தைக்கப்பட்ட உடைகளாக இருப்பதால் உடலின் பல பாககங்கள் சுதந்திரமாக செயல் பட செய்கிறது. இதனால் நமது மனம் உடலின் மீது கவனமில்லாமல் வீணான பல காரியங்களை செய்ய உடலை தூண்டி, அதன் சக்தியை வீணடிக்கிறது.
ஆனால் வேட்டி, சேலைகள் போன்ற உடைகள் நம்மை ஒரு விதமான கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறது. அந்த உடைகளில் நம்மால் சில காரியங்களை வேகமாக செய்ய முடியாது. அதே நேரம் அந்த உடைகள் நமது மனதை உடலின் மீது கவனம் கொள்ள செய்து, தேவையற்ற காரியங்களை செய்யாமல் நம்மை தடுத்து, நம் சக்தியை காக்கிறது. மேலும் வெட்டி தைக்கப்படாத இவ்வகை உடைகள் நமது உடலுக்கு மேல் இருக்கும் கண்ணனுக்கு தெரியாத சூட்சம உடல்களின் ஆற்றல்கள் அதிகம் வெளியேறாமல் தடுக்கிறது. ஒரு சில கோயில்களில் ஆண்கள் மேல்சட்டை அணியாமல் வெறும் வேஸ்டி கட்டிக்கொண்டு மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவது இந்த ஒரு காரணத்தினால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.