யாழ். கோப்பாய் பாலத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(11) இரவு இடம்பெற்ற பயங்கர விபத்தில் அளவெட்டியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விறகுக் குற்றிகளை ஏற்றிக் கொண்டு கைதடி- மானிப்பாய் வீதி ஊடாக மல்லாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்தில் ஒரு சில்லின் காற்றுத் திடீரெனப் போனமையால் குறித்த உழவு இயந்திரம் கோப்பாய்ப் பாலத்திற்கு அருகில் வீதியில் இன்று பிற்பகல் முதல் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதி ஊடாக மோட்டார்ச் சைக்கிளில் மேற்படி இளைஞன் பயணித்த நிலையில் இன்று இரவு-07 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக மோதுண்டுள்ளார்.
சிறிய ரக உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்ப்பக்கத்தில் கன்ரர் வாகனமொன்று வந்தமையால் வந்த வெளிச்சம் காரணமாக மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞனுக்கு உழவு இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையை சடுதியாக அடையாளம் காண முடியவில்லை.இதன் காரணமாகவே விபத்து சம்பவித்துள்ளது.
உழவியந்திரத்திலிருந்த விறகுக் குற்றிகளுடன் இளைஞனின் மோட்டார்ச் சைக்கிள் பலமாக மோதியமையால் மோட்டார்ச் சைக்கிள் பெரும் சேதமடைந்ததுடன் அதனைச் செலுத்தி வந்த இளைஞனும் முகத்தில் காயமடைந்துள்ளார்.
இதேவேளை, இளைஞனின் மோட்டார்ச் சைக்கிள் வேகம் குறைந்த நிலையில் வந்தமையால் உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் விபத்து இடம்பெற்ற சமநேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறியரக உழவு இயந்திரத்தின் எதிர்ப்பக்கமாக ஹன்ரர் ரக வாகனம் வந்த நிலையில் குறித்த இளைஞன் அதனை ஒருவேளை சடுதியாக முந்திச் சென்றிருந்தாலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.