இலங்கையில் தற்போதுள்ள எரிவாயு மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினையை உரிய வகையில் முகாமைப்படுத்த முடியாதுபோனால் அவை முழுமையாக இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று நிதியமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உரையாற்றிய அவர், இந்த நிலைமையை வெற்றிக்கொள்ள கட்சி பேதமின்றி அனைவருக்கும் பொறுப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டில் இலங்கையின் வருமானம் 1500 பில்லியன் ரூபாவாக இருந்தது.
எனினும் 3522 பில்லியன் ரூபா, இதில் மீண்டும் வருமானமாக கிடைக்காத செலவு 2748 பில்லியன் ரூபாய்களாகும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
1980ஆம் ஆண்டில் இலங்கையின் தலா தேசிய வருமானம் 23 வீதமாக இருந்தபோதும், 2021ஆம் ஆண்டு அது 8.7வீதமாக குறைந்துள்ளது.
அதேநேரம் முதலாவது வெளிநாட்டுக்கடன் 1954ஆம் ஆண்டு பெறப்பட்டது. இதன்போது 6 மில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக பெறப்பட்டது.
எனினும் 2020ஆம் ஆண்டில் 542 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வரியை அதிகரிக்கவேண்டிய காலத்தில் வரியை குறைத்தமை வரலாற்று தவறு என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்னதாக சென்றிருக்கவேண்டும் என்பதையும் ரூபாவின் தேய்மானத்தை முன்னதாக கிரமம் கிரமமாக செய்திருக்கமுடியும் என்பதையும் தாம் ஏற்றுக்கொள்வதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரசாங்கங்களும் அவ்வப்போது மக்களை சந்தோசப்படுத்தியதே தவிர நாட்டை பற்றி சிந்திக்கவில்லை என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிதிப்பிரச்சினையின் கீழ் எந்த ஒரு முதலீட்டாளர்களும் நாட்டுக்கு வரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
இந்தநிலையில் மத்திய மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டில் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் மறுசீரமைப்பு நிதி மற்றும் நீதி ஆலோசகர்கள் இன்னும இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்பட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த செயற்பாடுகளுக்கு 6 மாதங்களாவது செல்லும் என்றும் அலி சாப்ரி தெரிவித்தார்.
இந்தியா 500 மில்லியன் டொலர்களை ஏற்கனவே எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கியிருக்கிறது.
மேலும் 500 மில்லியன் டொலர்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2021இல் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தற்போது யதார்த்தமில்லை என்பதால், புதிய இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் அலி சாப்ரி தெரிவித்தார்.
ரொனி டி மெல்லுக்கு பின்னர் எந்தவொரு நிதியமைச்சரும் அதிகாரிகள் தரும் தகவல்களையே நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அலி சாப்ரி உரையாற்றிக்கொண்டிருக்கையில் எதிர்கட்சியினர் தொடர்ந்தும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் மாத்திரம் இலங்கையின் பொருளாதார பிரச்சினையை தீா்க்கமுடியாது என்றும் அலி சாப்ரி குறிப்பிட்டார்.