இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்சே பதவி விலகி குடும்பத்துடன் தலைமறைவானார்.
இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய பிரதமராக கடந்த 12-ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இந்த போராட்டத்தில் கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இலங்கையின் பிரதமராக பொறுப்பு வகித்த ராஜபக்ச வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.
மேலும், மஹிந்த ராஜபக்சவும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு உயிருக்கு பயந்து தனது குடும்பத்துடன் தலைமறைவானார். கோட்டபய அரசில் அனைவரும் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கோட்டபய மட்டும் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார்.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மே 17 ம் தேதியான இன்று அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் கடந்த மே 12-ஆம் திகதி தகவல் தெரிவித்தது. எனினும் புதிதாக பதவியேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
இதனால் அதிபர் கோட்டபய ராஜபக்சவிற்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் வர வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான SJB கடந்த வெள்ளிக்கிழமை, அதிபர் ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கப்போவதாக அறிவித்தது.
மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ளும் பொதுமக்களின் கவலைகளுக்கு தீர்வு காணத் தவறினால், அதிபர் ராஜபக்சவின் பதவியை பறிக்கவேண்டும் என்று தெரிவித்தது.
அதிபர் மற்றும் முழு ராஜபக்ச குடும்பத்தில் இருந்து அரசாங்க பதவிகளில் இருப்பவர்களை ராஜினாமா செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.
ராஜபக்ஷக்கள் பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ராஜபக்சவை அதிபராக நீடிக்கும் இடைக்கால அரசை ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாசா தெரிவித்துள்ளார். அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கும் தயார் என SJB தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், SJB சார்பில் அவர் நாடாளுமன்றத்தில் முன்மொழிவுகள் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
1948-இல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை இத்தகைய மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.