காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்த கடிதத்தை அவர் நான்கு பிரதான காரணிகளை முன் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக எந்த நன்மை பயக்கும் விடயங்களையும் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், அவ்வலுவலகத்தில் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என குறிப்பிட்டே இந்த இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கடந்த 2021 டிசம்பர் 13 ஆம் திகதி சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் ( ஓ.எம்.பி) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந் நிலையிலேயே சுமார் நான்கு மாத காலத்துக்குள்ளேயே அவர் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் சுதந்திரமாக செயற்படுவதற்கு அரசாங்கம் போதுமான அனுசரணையை அளிக்கவில்லை என ராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், ஒருங்கிணைந்த நிதியின் மூலம் போதுமான நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் அது செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் மீது நீதி அமைச்சின் தலையீடுகள், ஒப்புக்கொள்ளப்பட்டதன் பிரகாரம் அலுவலகத்துக்கு தேவையான உதவிகளை வழங்க வெளிவிவகார அமைச்சு தவறியமை, காணாமல் போனோர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை செயற்திறனாக முன்னெடுப்பதை கட்டுப்படுத்தும் அந்த அலுவலகத்தின் தற்போதைய யாப்பு உள்ளிட்ட காரணிகளை தனது ராஜினாமாவுக்கான காரணிகளாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் முன் வைத்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியினையும், நிவாரணத்தினையும் வழங்க முடியாது போயுள்ளதாகவும் அதனால் தான் ராஜினாமா செய்வதாகவும் குறித்த கடிதத்தில் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறிப்பிட்டுள்ளார்.
இன் நியமனம் தொடர்பில் தெரியவருவதாவது,
2021 டிசம்பர் 13 ஆம் திகதி முதல் மூன்று வருடங்களுக்கு காணாமல் போனோர் அலுவலக ஆணையாளராக சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ள நிலையில், அதற்கு பாராளுமன்ற சபை அனுமதி அளித்துள்ளது.
மேலும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் முன்னணி சமூக ஆர்வலராகவும், மனித உரிமைகளின் பாதுகாவலராகவும் பணியாற்றியதை கருத்தில் கொண்டு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்துக்கு அமைய செயல்பாடுகளை அவ்வலுவலகம் மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
OMP அலுவலகத்தை வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.