இடைக்கால அரசாங்கத்தின் வியூகத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்குவதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை.
புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் குறித்து ஜனாதிபதி சாதகமான தீர்மானத்தை விரைவில் முன்னெடுக்க நேரிடும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இடைக்கால அரசாங்கததின் ஊடாகவே தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவை மீது நம்பிக்கை கிடையாது. சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இதுவரை நிலையான தீர்வு பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு மகாசங்கத்தினர் உட்பட மத தலைவர்கள் ஜனாதிபதியிடம் உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
இடைக்கால அரசாங்கத்தின் வியூகத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்கி புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க இணக்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து ஜனாதிபதி சாதகமான தீர்மானத்தை வெகுவிரைவில் முன்னெடுக்க நேரிடும்.
பாராளுமன்றில் பெரும்பான்மை தரப்பினரது நம்பிக்கையினை பெற்றவர் இடைக்கால அரசாங்கத்தில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவார். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் முன்னேற்றகரமான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 40 பேர் ஒன்றிணைந்து உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைபினை கையளித்துள்ளோம். 21 ஆவது திருத்த பிரேரணையை அரசாங்கம் அவசர யோசனையாக கருதி அமைச்சரவையின் அங்கிகாரத்தை பெற்று பாராளுமன்றில் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.