ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தினால் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கின்றன நோய்கள்.
இவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாகப்படுத்தும் முக்கியமான பிரச்சனை வியர்க்குரு. நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம் சமாளிக்கலாம் தடுக்கலாம்.
உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள் உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு. முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.
வியர்வையால் இந்தச் சிறிய கட்டிகள் வருவதால், இதை வேர்க்குரு அல்லது வியர்க்குரு என்கிறோம். இது தொந்தரவே தவிர, வியாதி அல்ல. அதே நேரத்தில் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அரிப்புடன் கூடிய படை, தேமல் எனப் பல தோல் நோய்கள் ஏற்படக் காரணமாகிவிடும்.
கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்சனை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.
இதற்கான தீர்வுகள் :
பூமியில் விளையும் சீசனில் பழங்கள் அனைத்துமே, அந்தந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்றவை என்கிறது ஆயுர்வேதம். அதற்கு சிறந்த உதாரணம், நுங்கு. இது, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.
வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.
கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.
வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும்.
வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.
அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது ‘அறுகன் தைலம்’, ‘தூர்வாரி தைலம்’ என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.
வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.
பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும். மூலிகைகளின் சாறுகளால் தயாரிக்கப்பட்ட தன்வந்த்ரம் தைலத்தை உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் வியர்க்குரு மறைந்து விடும்.
சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.
வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை,வியர்குருவால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைத் தடுக்கும்.எனவே வியர்குரு அதிகம் இருந்தால், வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் கழுவுங்கள்.அல்லது வேப்பிலை போட்ட தண்ணீரை கொதிக்கவைத்து ஆறிய பின் அந்த நீரால் முகம் மற்றும் உடலைகழுவி வந்தால் வியர்குருவால் ஏற்படும்அரிப்பை கட்டுப்படுத்தும்.
வேப்ப மரத்துபட்டை இடித்து தூளக்கி உடம்பில் பூசி 20 நிமிடம் கழித்து குளிக்க உடம்பு நமச்சல் ,தடிப்பு நீங்கும்
சந்தனம் குளிர்ச்சித்தன்மை கொண்டது. சந்தனப்பொடியை ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து,சருமத்தில் தடவி ஊற வைத்துகழுவுங்கள்.இதனை தொடர்ந்து செய்து வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலைஉண்டாக்கும் வியர்குருவை போக்கலாம்.
கோடையில் சருமத்திற்கு சோப்பு பயன்படுத்துவதற்கு பதிலாக,பாசிப்பருப்பு மாவைக் கொண்டு தேய்த்து குளித்து வர வியர்குரு பிரச்சனையில்இருந்து விடுபடலாம்.
வெங்காய சாறை வியர்குரு மீது தடவினால் வியர்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.
பனை நுங்கு சதையை வியர்க்குரு உள்ள இடங்களில் தடவ வேண்டும். 2 வியர்வை, பூஞ்சை கிருமியால் ஏற்படும் சொறி, சிரங்கு,படை நீங்க வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலையை அரைத்து தடவலாம்.
பாசிப்பருப்பு மாவு, உளுத்தம் பருப்புமாவு, கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை ஒன்றாக சரிவிகிதத்தில் கலந்து, தினமும் அவற்றைக்கொண்டு தேய்த்து குளிக்க வேண்டும்.
உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சாதம் வடித்த கஞ்சியை வியர்குரு மீது தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வியர்குரு குணமாகும்.