இந்தியாவின் “மிஷன் ஆக்ஸிஜன்” என்ற நிதிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், இந்தியா முழுவதும் கோவிட்-19 உடன் போராடும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் “மிஷன் ஆக்ஸிஜன்” என்ற நிதிக்கு சச்சின் டெண்டுல்கர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
இது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “COVID-ன் இரண்டாவது அலை நமது சுகாதார பராமரிப்பு முறையை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான தீவிர கோவிட் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது” என கூறியுள்ளார்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்றிணைந்துள்ளதைப் பார்ப்பது மனம் கவர்ந்ததாகக் கூறிய அவர், “250க்கும் அதிகமான இளம் தொழில்முனைவோர் குழு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கும் நிதி திரட்டுவதற்காக மிஷன் ஆக்ஸிஜனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காரணத்திற்காக இதில் பங்களிப்பதன் மூலம் நான் உதவி செய்தேன், அவர்களின் முயற்சி விரைவில் இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன்.
நான் விளையாடும்போது நீங்கள் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றது மற்றும் அது எனக்கு வெற்றிபெற உதவியது” அதேபோல் “இன்று, இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் பின்னால் நாம் ஒன்றாக நிற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
pic.twitter.com/7053Bcl1Zf
— Mission Oxygen India (@india_oxygen) April 29, 2021
அவர் அந்த அறிக்கையில், தனது உதவித் தொகை குறித்த விவரத்தை வெளியிடவில்லை. ஆனால், அவரது டீவீட்டுக்கு பதிலளித்த ‘மிஷன் ஆக்சிஜன் இந்தியா’ சச்சினுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளாதாக வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான பேட் கம்மின்ஸ் AUD 50,000 (ரூ. 28.8 லட்சம்) பிரதமர் பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்கியிருந்தார். அவரைத் தொடர்ந்து பிரெட் லீ கிட்டத்தட்ட ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ஒரு பிட்காயினை (bitcoin) இந்தியாவுக்கு நன்கொடையாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.