கொரோனா அறிகுறி தென்பட்டால் வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவது பாதகமான விளைவை ஏற்படுத்தும், எனவே வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறவதன் மூலம் இறப்புக்களை தவிர்க்கலாம் என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் கொரோனா நோய் அறிகுறி காணப்படுமிடத்து உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று நோய்க்குரிய சிகிச்சையினை பெறுமிடத்து உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.
குறிப்பாக கடந்த மாதத்திலிருந்து யாழ். மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் பதிவாகின்றன.
எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் சற்று அவதானமாக செயற்படவேண்டும்
சிலர் கொரோனா தொற்று அறிகுறி காணப்படும் போது வீடுகளில் இருந்தவாறு தமக்கு சிகிச்சை அளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எனினும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் சில பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.
அதாவது நோய் தொற்றுக்கு உள்ளாகி நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது சில வேளைகளில் இறப்பு சம்பவிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
அதாவது நோய் அறிகுறி காணப்படும் இடத்தில் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று பி.சி.ஆர் பரிசோதனை முடிவினை பெற்றுவைத்திய ஆலோசனையைப் பெற்று செயற்படுவதன் மூலம் யாழ். மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என மேலும் தெரிவித்தார்.