கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் 50,000 ரூபா நிவாரணம் அளிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை கடந்த ஜூன் 30 ஆம் திகதி விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை 6 வாரங்களுக்குள் பரிந்துரைக்குமாறு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துக்கு (என்டிஎம்ஏ) உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘‘கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை என்டிஎம்ஏ வழங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், தொற்றை எதிா்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு பலியானவா்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 நிவாரணத் தொகை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி எதிா்காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கும் அல்லது அதுதொடா்பாக மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரையிலும் வழங்கப்படும்.
மாநில அரசுகள் தங்கள் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையை அளிக்கும். அதற்கான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிவாரணத் தொகை பரிவா்த்தனை செய்யப்படும்.
நிவாரணத் தொகையை பரிவா்த்தனை செய்யும் பணிகளை மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையம்/ மாவட்ட நிா்வாகம் மூலம் மேற்கொள்ள என்டிஎம்ஏ வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. நிவாரணத் தொகையைப் பெற தங்கள் குடும்ப உறுப்பினா் கொரோனா பாதிப்பால்தான் உயிரிழந்தாா் என்பதற்கான இறப்புச் சான்றிதழ் உள்பட உரிய ஆவணங்களுடன் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் அளிக்கும் படிவத்தை பூா்த்தி செய்து தரவேண்டும்.
உயிரிழந்தவா் கொரோனா பாதிப்பால்தான் பலியானாா் என சான்றளிப்பதில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால், அவற்றை நிவா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கூடுதல் மாவட்ட ஆட்சியா், தலைமை மருத்துவ அதிகாரி, ஓா் மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவா் (மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி இருந்தால்) மற்றும் துறைசாா் நிபுணா் அடங்கிய குழு முன்மொழிய வேண்டும் என்று என்டிஎம்ஏ வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. குறைகளை நிவா்த்தி செய்யும் பணிகளில் தகவல்களை உறுதி செய்த பின்னா் கொரோனா இறப்புக்கான திருத்தப்பட்ட ஆவணங்களை அளிக்க முன்மொழிவதும் அடங்குமென தனது வழிகாட்டுதலில் என்டிஎம்ஏ குறிப்பிட்டுள்ளது’’ என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.