நேற்று இரவு முதல் கொழும்பிற்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களும் தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொழும்பில் மக்கள் அதிக வாழும் தோட்டங்கள், குடிசை வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் பலத்த இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
இவ்வாறான நிலையில் மக்கள் தங்கியுள்ள இடங்களிலிருந்து பிரதான வீதியை அடைய முடியாத நிலைமை நேற்றிரவு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக விசேட பிரபுகளின் வீடுகளுக்கு இராணுவம மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல்வாதிகள் தப்பியோட்டம்
ஆளும் கட்சி உறுப்பினர்களின் வீடுகளில் எவரும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகளை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், சிலர் தங்களுடைய இருப்பிடத்தை அறிவிக்கவில்லை எனவும், சிலர் தொலைபேசிகளை துண்டித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறியதுடன், கொழும்பு 7இல் உள்ள தனது இல்லத்தில் இருந்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்முறை வெடிக்கும் அபாயம்
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற பாரிய வன்முறை சம்பவங்களை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார். வன்முறையின் போது பல அமைச்சர்கள் உடபட அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது