சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல் மற்றும் பல்கலைக்கழகத்தின் புதிய நுழைவாயில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட தொழில்முறை அதிகாரிகளை உருவாக்கும் நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
அங்கு இதுவரை காணப்பட்ட பாதுகாப்பு, மருத்துவம், பொறியியல், சட்டம், சுகாதாரம், முகாமைத்துவம், சமூகவியல் மற்றும் மானுடவியல், கணினி, சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி ஆகிய ஒன்பது பீடங்களுக்கு மேலதிகமாக, தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்ததையும், தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமையையும் குறிக்கும் வகையில் பிரதமர் விசேட குறிப்பொன்றை விடுத்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் அவர்களினால் பிரதமருக்கு நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது.
வைபவத்தில் கலந்து கொண்ட பிரதம அதிதிகள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் கல்விப் பணியாளர்களுடன் பிரதமர் குழு புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
எமது அரசாங்கங்கள் எப்போதும் கல்வி குறித்து விசேட கவனம் செலுத்தி வருகின்றன. உயர்கல்வி, பல்கலைக்கழக அமைப்பு மற்றும் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் உழைத்தோம். அதனால்தான் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுத்தோம். நான் ஜனாதிபதியாக இருந்த போது இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தினேன்.
நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரண்டு முறை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளேன். 2007ஆம் ஆண்டு கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வில் கலந்துகொண்டேன். 2014ஆம் ஆண்டு வேரஹெர சுகாதார அறிவியல் பீடத்தின் திறப்பு விழாவிலும் கலந்துகொண்டேன்.
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்விலும் பிரதான நுழைவாயில் வளாகத்தின் திறப்பு விழாவிலும் இன்று நான் மூன்றாவது தடவையாக வருகைத் தந்துள்ளேன்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டமை மிக முக்கியமான மைல்கல் என்பதை கூற வேண்டும். ஒவ்வொரு வருடமும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பிற்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை அதன் வெற்றிக்கு சான்றாகும்.
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு பல்கலைக்கழகம் தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றுநோய்க்கு முன்னர், ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் உயர்கல்விக்காக வருடாந்தம் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அதனூடாக ஏறத்தாழ நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியை நாடு இழக்க வேண்டியுள்ளது. இது தேசிய அளவில் மிகவும் கடுமையான நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கிறது.
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல எதிர்பார்த்திருந்த பெருமளவிலான மாணவர்களைத் தக்கவைத்ததன் ஊடாக பாதுகாப்புப் பல்கலைக்கழகம் மில்லியன் கணக்கான டொலர் அந்நியச் செலாவணியைச் நாட்டுக்கு சேமித்து தந்துள்ளது என நம்புகிறோம்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொலைநோக்கு பார்வையுடன் செயற்பட்டு நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை வழங்கி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை பிரதமர் என்ற ரீதியில் நான் பாராட்டுகிறேன்.
2022ஆம் ஆண்டு முதல் புதிய இரண்டு பீடங்களை எதிர்கால நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளமையை நான் கூற விரும்புகிறேன். அரச பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெறாத திறமையான மாணவர்களுக்கு பட்டப் படிப்புகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், உங்களது பல்கலைக்கழகம் நாட்டுக்கு பெரும் சேவையை ஆற்றி வருகின்றது.
இலங்கையை தெற்காசிய வலய கல்வி மையமாக மாற்றுவதே எமது அரசாங்கங்களின் கொள்கை.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, பல்கலைக்கழக கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்குவதும் ஆகும். அதன்படி, கடந்த ஆண்டு அரசுப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தோம்.
தேசிய நலன்களை அறிந்துக்கொண்ட ஒரு பல்கலைக்கழகம் என்ற வகையில், நமது எதிர்கால சந்ததியினருக்கு வழங்கப்படும் பட்டப்படிப்பு திட்டங்களின் பாடத்திட்டத்தை, தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அடையாளம் காணப்பட்ட புதிய போக்குகளுக்கு ஏற்ப சரியான நேரத்தில் புதுப்பிப்பதும் முக்கியம்.
(பாதுகாப்புப் பல்கலைக்கழகம் பிள்ளைகளின் சிறந்த திறன்களை வளர்க்க கடினமாகவும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதை நாங்கள் அறிவோம். இன்று பிள்ளைகளுக்கு தகவல் தொழில்நுட்பத் திறன் மற்றும் ஆங்கிலத் தொடர்பாடல் திறன் இருக்க வேண்டும்.
பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் அனைத்துப் பட்டப் படிப்புகளிலும் இதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதே இதற்குச் சிறந்த சான்றாகும்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மனிதாபிமான நடவடிக்கையின் போதும், போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் காயமடைந்தவர்களைக் கவனிப்பதற்கு ஆயுதப்படைகளுக்கு மேலதிக மருத்துவர்கள் தேவைப்பட்டனர். அதற்கு உங்களது பல்கலைக்கழகம் பங்களிப்பு செய்தது. மருத்துவ பீடத்தை நிறுவியதன் மூலம், அனைத்து ஆயுதபடைக்கும் மருத்துவ நிபுணர் குழுவொன்றை உருவாக்கும் தேசிய பொறுப்பை பாதுகாப்பு பல்கலைக்கழகம் முழுமையாக நிறைவேற்றியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கு அதற்கு தகுதியான பலர் அவசியம். புதிய தொழிநுட்ப பீடம் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் அபிவிருத்திச் செயற்பாட்டிற்குத் தேவையான திறமையான நிபுணர்களை உருவாக்க கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு முடிந்தது என நம்புகிறோம்.
முப்படையினரின் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் நாட்டின் பிள்ளைகளுக்கு ஒழுக்கமான சூழலில் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதிலும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆற்றிவரும் சிறந்த சேவை பாராட்டப்பட வேண்டியதாகும்.