கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையில் குறுந்தூர பயணிகளையும் ஏற்றி செல்லுமாறு , நெடுந்தூர பேருந்து சாரதிகளுக்கு வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவுத்தியுள்ளார்.
கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையிலான பகுதிகளைச் சேர்ந்த மக்களும், பாடசாலை மாணவர்களும் தங்களுக்கான போக்குவரத்துச் சேவை சீராகக் கிடைப்பதில்லையென முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
குறித்த பகுதிக்கு இடையில், குறுந்தூர பேருந்து சேவை இல்லாத காரணத்தால் இப்பகுதி பயணிகள் நீண்டதூர பேருந்துகளை நம்பியுள்ளனர். ஆனால் பல நீண்டதூர பேருந்துகள் இப்பகுதியிலுள்ள பயணிகளை ஏற்றாமல் தவிர்த்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுகின்ற யாழ் – வவுனியா, யாழ் – முல்லைத்தீவு, யாழ் -கிளிநொச்சி, யாழ் – துணுக்காய் வழித்தட பேருந்துகள் அனைத்தும் கொடிகாமம் சந்தி முதல் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகளை ஏற்றிச் செல்லுதல் கட்டாயம் என கடமையில் இருக்கும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆகியனவற்றுக்கு, போக்குவரத்துக்கு அதிகார சபையின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.