கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கெரகலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் அதுதொடர்பில் இருதரப்பிக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு நாட்டுக்கு பொருத்தமான, ஆரோக்கியமான தீர்மானத்தையே அரசாங்கம் இறுதியில் முன்னெடுக்கும். அத்துடன் இந்திய வெளிவிவகார செயலாளர் கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வந்து சென்று விட்டார். அவரின் விஜயம் தொடர்பாக பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அவர் எந்தவித அழுத்தத்தையும் இலங்கை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கவில்லை. குறிப்பாக 13ஆம் திருத்தம் தொடர்பாகவோ திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாகவோ எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. அத்துடன் அவரது விஜயம் குறிப்பிட்ட ஒரு விடயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதொன்று அல்ல.
இரண்டு நாடுகளுக்கிடையில் பூரண இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அவரின் விஜயத்தின் அடிப்படையாக இருந்தது பெளத்த தர்மமாகும். எமது கலாசாரம், பொருளாதாரம் என பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருத்திருந்தன.
அவ்வாறு இல்லாமல் இந்திய வெளிவிவகார செயலாளரின் விஜயம் எமது ஏதாவது வேலைத்திடம் அல்லது வேறு ஏதாவது விடயத்துக்கு எமக்கு அழுத்தம் பிரயோகிக்க வரவில்லை என்பதை நான் உறுதியாக தெரிவிக்கின்றேன் என்றார்.