சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள பொதுக்கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை உண்மைக்கு புறம்பான தகவல் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் பொதுக் கூட்டணியை அமைப்பதற்கு சகலரும் இணக்கம் தெரிவித்ததாக லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் (24-04-2023) கொழும்பில் உள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து மைத்திரிபால சிறிசேன அதனை மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுதந்திர கட்சி வேறு எந்த கட்சியுடனும் கூட்டணியமைக்கவில்லை. இனிவரும் காலங்களிலேயே தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
தற்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே நாம் கட்சியின் தனித்துவத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலேயே தீர்மானங்களை எடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.