கிளிநொச்சியில் உடன் பிறவாச் சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயதுச் சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.அப்துல் ரகுமான் சயா எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி தனது சொந்த ஊரான மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார். குறித்த சிறுவனுக்கு 9 வயதில் மூத்த சகோதரனும், 4 வயதில் இளைய சகோதரனும் உள்ளனர்.
சிறுவனின் தந்தை தனது உடன் பிறந்த சகோதரனின் வீட்டில் மூன்று பிள்ளைகளையும் கைவிட்டு கடந்த 22ஆம் திகதி தலைமறைவாகியுள்ளார். அவர் தலைமறைவாகிய நேரம் சகோதரனின் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு ஒன்றும் திருட்டுப் போயுள்ளது. அதனால் தனது சிறிய தந்தை மாட்டைத் திருடி விட்டு தப்பித்துள்ளார் எனக் கருதி உடன் பிறவாச் சகோதரர்கள் மூவரையும் 17 வயதுடைய ஒன்றுவிட்ட சகோதரன் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அதில் கடந்த 22ஆம் திகதி 7 வயது உடன் பிறவாச் சகோதரனை ஆட்கள் அற்ற வீட்டுக்கு அழைத்துச் சென்று மாட்டைக் கேட்டு அவர் தாக்கியுள்ளார்.
அதனால் தாக்குதலுக்குள்ளான சிறுவன் சுயநினைவற்று நிலத்தில் சுருண்டு வீழ்ந்துள்ளார். இவ்வாறு வீழ்ந்த சிறுவனை அந்த இடத்தில் கைவிட்டு ஒன்றுவிட்ட சகோதரன் வீடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து சிறுவனை உறவினர்கள் தேடிச் சென்றபோது அவர் நிலத்தில் சுயநினைவற்று கிடந்துள்ளார். அவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உறவினர்களால் சேர்க்கப்பட்டுமேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், 5 நாட்கள் தொடர் சிகிச்சை பயனளிக்காத நிலையில் சிறுவன் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்ட நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவன் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டதால் மூளையில் ஏற்பட்ட குருதிக் கசிவால் உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் கிளிநொச்சிப் காவற்துஐறயினர், கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்ட 17 வயது இளைஞரைத் தேடிவரும் நிலையில் அவரும் தலைமறைவாகியுள்ளார்.