கிளிநொச்சி – கரடிபோக்கு பூநகரி இணைப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27.06) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விடுமுறைக்கு வீடு சென்று கடமைக்குத் திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி கரடிபோக்கு சந்தி ஊடாக பூநகரி, பரந்தன் வீதிக்கு இணைப்பு வீதி ஒன்றின் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் யாழ்.பொலிஸ் நிலைய நீதிமன்ற பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மணிநேரம் சடலம் வாய்க்கால் பகுதியில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து வீதியால் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு விபத்து இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதி வளைவு காணப்படும் நிலையில், அதிக வேகம் விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில், அருகில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.