அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வரும் “கோட்டா கோ கம” பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களும் உடைத்து எறியப்படுகின்றன.
காலிமுகத்திடல் பகுதியில் பதற்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். மூன்றாம் இணைப்பு
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நடுவில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பொலிஸார் (தடுப்பு சுவர் போல்) குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான பொலிஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காலிமுகத்திடல் நோக்கி விரையும் அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் பொல்லுகள் மற்றும் தடிகளுடன் காலிமுகத்திடல் நோக்கி விரைவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாம் இணைப்பு
அலரி மாளிகை முன் திரண்ட அரசாங்கத்திற்கு குறிப்பாக மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் பகுதிக்கு செல்ல தயாராகியுள்ளனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் காலிமுகத்திடல் நோக்கி செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இன்று காலை அலரி மாளிகை பகுதிக்கு காலிமுகத்திடல் போராட்டத்தை சேர்ந்த மூவர் வந்திருந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்ட அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த மூவரையும் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை தொடர்ந்து சம்பவத்தை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர் ஒருவரும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசாங்க ஆதரவாளர்கள் காலிமுகத்திடல் நோக்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.