யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் , விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதாக அரச ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு, இந்திய துணைத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்த ‘கார்த்திகை வாசம்’ மலர்த்தோட்டத்தை ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார்.
இதன்போது அவருக்கு கார்த்திகைப்பூ அணிவிக்கப்பட்டது. வடமாகாண மரநடுகை வாரத்தை முன்னிட்டு, கடந்த சில வருடங்களாக தமிழ் தேசிய பசுமை இயக்கம், வருடாந்தம் இந்த நிகழ்வை நடத்தி வருகிறது. அதோடு அங்கு மலர்க்கண்காட்சியும், விற்பனையும் நடந்து வருவதுடன் மாணவர்களிற்கு இலவச மரக்கன்றுகளையும் வழங்கி வருகிறது.
எனினும், தமிழ், சிங்கள அரச ஆதரவு ஊடகங்கள் இந்த விடயத்தை பெரும் சர்ச்சையாக்கி இருந்தன. அது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வு என்றும், அந்த நிகழ்வில் , இந்திய துணைத்தூதரும் கலந்து கொண்டதாகவும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய ஊடகச் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் அறிக்கையொன்றை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. “2021 நவம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இந்திய துணைத்தூதர் பசுமைக் கண்காட்சியை ஆரம்பித்து, தாவர மரக்கன்றுகளை விநியோகித்தது தொடர்பாக பல தவறான ஊடகச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
அவருக்கு வந்த அழைப்பின் பேரில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அந் நிகழ்வில் கலந்து கொண்டார். அத்தகைய பங்கேற்பு எந்த வகையிலும் ஏற்பாட்டாளர்கள் அல்லது அவர்களின் செயல்களுடன் தொடர்புபடுத்த முடியாது. இது பற்றி அவருக்கு முன் தகவல் இல்லை, ”என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் வறண்ட வலயங்களில் மலரும் கார்த்திகை பூ, கார்த்திகை மாதங்களில் மலர்வது. வடக்கு, கிழக்கில் உள்ளிட்ட பல இடங்களில் அப்பூ மலரும் எனப்து அனைவரும் அறித்த விடயம்.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் கார்த்திகை மலரை தமது அடையாளங்களில் ஒன்றாக கொண்டிருந்தார்கள் என்ற ஒரே காரணத்தினால், தமிழ் நிலத்தின் தனித்துவமான மலரையும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கும் முயற்சியில் அரச ஆதரவு ஊடகங்கள் தீவிர முயற்சி மேற்கொள்வது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.