நடிகர் ஆர்யாவிற்கு எதிரான ஈழத்தமிழ்ப்பெண் அளித்த காதல் பணமோசடி புகார் குறித்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஆர்யாவின் மோசடிக்கு ஆதாரமாக 70 பக்க ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு காலத்தில் காதல் நாயகனாக இருந்த நடிகர் ஆர்யா தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நாயகனாக நடித்து வருகின்றார். ஜெர்மனியில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் இருந்து இந்திய பணமதிப்பில் 70 லட்சம் ரூபாய் வரை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் பெற்றுக் கொண்ட ஆர்யா திருமணம் செய்யாமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி விட்டதாக பிரதமர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் அங்கிருந்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புகார் தொடர்பாக பெருநகர சென்னை போலீசார் விசாரணையை தாமதப்படுத்தி வந்த நிலையில் ஆர்யா மீதான மோசடி புகார் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தக்கோரி ஈழத்தமிழ் பெண் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் ஆனந்தன் நீதிமன்றத்தை நாடினார்.
இதையடுத்து ஆர்யா மீதான மோசடி புகாரை விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்யா மீதான பண மோசடி புகாருக்கு ஆதாரமாக வாட்ஸ் அப் சாட்டிங், குரல் பதிவுகள் உள்ளிட்ட 70 பக்க ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.
இதற்கிடையே சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஆர்யாவின் உதவியாளர் முகமது அர்மான் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். நிஜத்தில் ஜம்சத் என்ற பெயரில் உள்ள ஆர்யா காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகின்றது.
விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள ஆர்யாவை பிடித்து விசாரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவத்தின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், ஆர்யா கைது செய்யப்படுவாரா ? என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.