இந்தியாவில் குடியரசு தின நாளில் கூட்டுப்பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை, உள்ளூர் மக்கள் அவமானப்படுத்தி செருப்பு மாலையுடன் ஊர்வலம் அழைத்துச் சென்ற காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
டெல்லியில் உள்ள ஷாதரா பகுதியில், நேற்று பெண்ணொருவர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் அழைத்து செல்லப்பட்டார். இதன்போது பல பெண்கள் அவரை சூழ்ந்திருந்த நிலையில், அவர்களே பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து, முகத்தில் கருப்பு மைபூசி, உடையை கிழித்து அழைத்து சென்றுள்ளனர்.
இதற்கு பல பெண்களும் கைகளை தட்டி, குரலில் ஆரவாரத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் சகோதரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல் துறையினரை பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணையில், பெண் முன்விரோதம் காரணமாக, அப்பகுதி வாசிகளாலேயே கொடுமைப்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
அப்பகுதியை சார்ந்த 21 வயது இளம்பெண்ணை இளைஞர் காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இளைஞர் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் அந்த தற்கொலைக்கு பெண் தான் காரணம் என்று கூறி அப்பகுதி வாசிகள் கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் கும்பல், பெண்ணை கடத்தி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதி பெண்கள் கும்பலாக சேர்ந்து பெண்ணை அடித்து ஆடையை கிழித்து, வீதியில் செருப்பு மாலையுடன் ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணுக்கு உளவியல் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அதிகாரிகள் , பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலையும் வலை வீசி தேடிவருகின்றனர்.