தீபரவிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் கழிவுப் பொருட்களை சேகரித்த பலருக்கு பல்வேறு சுகயீனங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
இந்த கப்பலில் இருந்து மிதந்து வந்த பொருட்களை சேகரித்த பலருக்கே, இவ்வாறான சுகயீனங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
மக்கள் இதைவிடவும் கவனமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
கொரோனா தொற்றுக்கு மேலதிக வேறு தொற்று நோய் உருவாக்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கப்பலில் இருந்த பல பொருட்கள் நீர்கொழும்பு முதல் பாணந்துரை வரையான கடற்கரை பகுதிகளை நோக்கி மிதந்து வந்துள்ளன.
இந்த பொருட்களை சேகரிக்கவோ, தொடவோ வேண்டாம் என அரசாங்கம் கோரியிருந்த நிலையில், மக்கள் குறித்த பொருட்களை நேற்றைய தினம் சேகரித்து இருந்தனர்.
இவ்வாறு பொருட்களை சேகரித்த 8 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.