தமிழகத்தில் கணவரை கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு, கேரளாவில் பதுங்கிய இளம்பெண்ணை கள்ளக்காதலனுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் லியோபால் (33). இவரது மனைவி சுஜித்ராமேரி (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில், கடந்த மாதம் 3ம் திகதி, சுஜித்ராமேரி, சென்னையில் உள்ள தனது மாமனார் சகாயராஜை செல்போனில் தொடா்பு கொண்டு,புதுச்சேரியில் நடந்த திருமண விழாவுக்கு சென்ற லியோபால் 4 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் சகாயராஜ் வீட்டுக்கு வந்தபோது சுஜித்ரா மேரியை அங்கு காணவில்லை. குழந்தைகள் மட்டும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் அவருக்கு தனது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.தொடர்ந்து அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போது,
அவர்களது வீட்டு தோட்டத்தில் புதிதாக பள்ளம் தோண்டியபடி கிடந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தை பொலிசார், தோண்டி பார்த்த போது லியோபால் புதைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில், சுஜித்ராமேரிக்கும், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராதாகிருஷ்ணன்(20) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
ராதாகிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் லியோபாலுக்கு தெரியவரவே,அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டு, தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதனிடையே, தலைமறைவான ஜோடியை பொலிசார் தீவிரமாக தேடி வந்தனர். அதில், ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கேரளாவில் வசித்து வருவதும், அங்கு இவர்கள் சென்று தங்கி இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து தனிப்படை பொலிசார் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சுஜித்ரா மேரி, ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து, விக்கிரவாண்டிக்கு அழைத்து வந்தனர்.
கைதான ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தில், ஏற்கனவே ஒருவரை அடித்துக் கொலை செய்த பாணியை பின்பற்றி லியோபாலை தீர்த்து கட்டியதாக கூறியுள்ளார்.தற்போது அந்த கொலை குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.