ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இணைந்து கொண்டமைக்காக அவரை கட்சியிலிருந்து நீக்குமாறும் சந்திரிக்கா தெரிவித்தார். அத்துடன் தாம் உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்பதால் ஸ்ரீலங்கா பெரமுன கூட்டணியில் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக விடுத்த கோரிக்கைக்கு மைத்திரி செவிசாய்க்கவில்லை எனவும் கட்சியின் அரசியல் குழு மற்றும் ஏற்பாட்டுக் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டதாகவும் சந்திரிக்கா தெரிவித்தார்.
இரண்டு வருடங்களாக கூறியதையே தற்போது மைத்திரி மீண்டும் கூறுவதாகவும் சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேசமயம் யுத்த காலத்திலும் தாம் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்ததாகத் தெரிவித்த சந்திரிக்கா, இன்று நாட்டைப் பார்க்கும் போது அழுவதா சிரிப்பதா என தெரியாத நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.