இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதலில் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்தனர் என சந்தேகிக்கப்படும் 35 பேரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்களை சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற மீன்பிடி இழுவை படகு ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பாணந்துறை கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்ருந்த போது சந்தேகத்திற்குரிய இலங்கை இழுவை படகு ஒன்றை அவதானித்துள்ளனர்.
படகை இடைமறித்த கடற்படையினர், சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்லும் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் உட்பட 25 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 6 பிள்ளைகளை கைது செய்துள்ளனர்.
அத்துடன் கடற்படையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மீன்பிடி இழுவை படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதும் அது நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதல்ல எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் 6 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் கையளிக்கப்பட உள்ளனர்.