நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை எமக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் நேற்று (05) இடம்பெற்ற சிறுவர்தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது மிக மிக முக்கியமானது என்பதை சிறார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவராக நான் 10 வருடங்கள் இருந்தேன்.
அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் எமக்கு நேரமுகாமைத்துவத்தில் முன்னோடியாக இருந்தார். அந்தவகையில் தற்போதும் எம்மால் மிகச் சிறப்பாக பின்பற்ற முடிகின்றது.
இவ்வாறாக நேர முகாமைத்துவம் உட்பட அனைத்துப் பண்புகளையும் பின்பற்றிக்கொண்டு சிறார்கள் அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
எமது பிள்ளைகள் அனைவரும் சிறப்பான முறையில் கற்றல்செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். தற்போது எமது மாவட்டம் கல்வியில் 25ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆனால் வறுமையில் முதல்நிலையிலுள்ள மாவட்டமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எமது மாவட்டங்களுக்கு கல்விக்கான வளப்பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்யுமாறு உரியவர்களைக் கோரியிருக்கின்றேன்.
இது தவிர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம்தான் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த குளிரூட்ட சொகுசு பேருந்து சேவையை விரைந்து ஆரம்பிக்குமாறு உரிய அமைச்சிடம் கோரியிருக்கின்றேன்.
அதேபோல் வட்டுவாகல் பாலத்தினை அமைக்குமாறு தொடர்ச்சியாக கோரியதற்கு அமைவாக அந்தப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன்.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப்பாலத்தினை அமைத்துத்தருவதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக எமது மக்களின் கோரிக்கைகளையே நாம் உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று நிறைவேற்றுக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டுவருகின்றோம்.