தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனிடம் அதிமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன் படி, அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் 48 எம்எல்ஏக்களை தவிர பலருக்கும் மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.அப்படி சீட் பெற்றவர்களில் ஒருவர் தான் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மாணிக்கம். இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய முடிவு செய்த மாணிக்கம் நேற்று வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வருகை தந்தார்.அப்போது அவருடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனான ஓ.பி. ரவீந்திரநாத் குமாரும் வந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு வந்த பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்னர் திடீரென ரவீந்திரநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் மாணிக்கம்.இதைக் கண்ட அங்கிருந்த கட்சியினர் சிலர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.