“பிரபாகரன் சட்டகம்” ஆசிரியர் கலாநிதி சேதுராமலிங்கம் அவர்களது ஆய்வுப்பதிவு.
——————————————–
வரலாற்றுத் திரிபுகள்
அண்மையில் புலம்பெயர் தேசங்களில் கற்பிக்கப்படும் தமிழ் நூல்களில் பெரிய அளவில் வரலாற்றுத் திரிபுகள் இடம்பெற்றுள்ளன என அறிகிறேன். அதுவும் குறிப்பாக புலிகளின் வரலாற்றை மறைப்பது, இன அழிப்பை மறைப்பது, அந்நிய அரசுகளின் விருப்பப்படி அவர்கள் விரும்பும் வரலாற்றைத் திணிப்பது போன்றவை இடம்பெற்றுள்ளன. அவ்வாறான நூல்களை எழுதுவதற்கு அந்நிய அரசுகள் நிதி உதவியும் அளிக்கின்றன. இதற்கு மயங்கி பல இன உணர்வாளர்களும் “பிள்ளைகள் தமிழ் படித்தால் போதும்” என்று வரலாற்றுத் திரிபுகளை ஏற்றுக்கொள்ளும் நிலையையும் காண்கிறேன். இது அறியாமையே. வரலாற்றின் முக்கியத்துவத்தை உணர்த்த சில முக்கிய கருத்துக்களைப் பகிர்கிறேன்.
1. தேசியம் என்பது வரலாறுதான்.
தேசியத்தைப் பற்றிய சமூக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளும் பொதுவான உண்மை என்னவென்றால், தேசியம் என்பது வரலாறுதான். ஒரே வரலாற்றை உள்வாங்கியவர்கள் ஒரு தேசியமாகிறார்கள்.
வரலாறு என்பது தேசத்தின் புனிதம், பூர்விக நிலம், பொற்காலம், அடையாளம், அறம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது. தேசியம் என்பது உணர்வு சார்ந்தது, பகுத்தறிவு சார்ந்தது அல்ல. ஒரே வரலாற்றுக் கதைகளை உள்வாங்கியவர்களை ஒரு தேசியமாக உணர்வுகள் அவர்களை இணைக்கிறது.
எதிரிகள் தமிழினத்தை அழிக்கவேண்டுமானால் நமது வரலாற்றை மறைத்து, அவர்களின் வரலாறுதான் நமது வரலாறு என்று கற்பித்தால் போதுமானது. அவர்களின் வரலாற்றை உள்வாங்கிய தமிழர்கள் அவர்களின் தேசியத்தில் கரைந்து போவார்கள். அதை அவர்கள் தமிழ் மொழியிலேயே செய்து நம்மை அழிக்க முடியும். தமிழ்நாட்டில் அதுதான் நீண்ட காலமாக நடைபெறுகிறது. இன்று ஈழத்திலும் அதுதான் நடைபெறுகிறது. இப்பொழுது புலம்பெயர் தேசங்களிலும் எதிரிகள் அவர்களின் வரலாற்றை நம்மீது திணிக்கப் பார்க்கிறார்கள். தமிழை வளர்க்க உதவி செய்கிறோம் என்றும் வருவார்கள்.
தமிழினம் தனது இருப்பைத் தக்கவைக்க வேண்டுமானால், நமது வரலாற்றை நமது கையில் வைத்திருக்க வேண்டும். நமது வரலாற்றை எழுதும் உரிமை நமக்கு மட்டுமே உண்டு. வேறு எவருக்கும் இல்லை. நமது வரலாற்றில்தான் நமது சுதந்திரமும் எதிர்காலமும் தங்கியுள்ளது. நமது வரலாற்றை நாமே அழிப்பது அல்லது மறைப்பது என்பது நாமே செய்துகொள்ளும் தற்கொலை.
2. வரலாறுதான் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது
தேசத்தின் வரலாறு என்பது ஏதோ பழையது, எந்தவொரு விளைவும் இல்லாதது அல்ல. ஒரு தேசத்திற்கு எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல இறந்தகால வரலாறும் முக்கியம்.
மனிதர்கள் தங்கள் எதிர்கால வரலாற்றை தாங்களே படைக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை எப்படி வேண்டுமானாலும் படைப்பதில்லை. அவர்கள் நிகழ்கால சூழ்நிலையையும், முன்னோர்கள் அவர்களுக்களித்த இறந்தகால வரலாற்றையும் கொண்டே எதிர்காலத்தை படைக்கிறார்கள்
ஒரு தேசிய கருத்தியல் மக்களின் வரலாற்று நினைவுடன் எவ்வளவு ஒத்துப்போகிறதோ, அதற்கேற்றவாறே கருத்தியலின் வேகம் இருக்கும். அவ்வாறு இருக்கும்பொழுது மக்களின் பேரெழுச்சி நடக்கும். தங்களின் அன்றாட கவலைகளை மறந்து, பயத்தினை துறந்து பொதுநன்மைக்கு போராடத் தயாராவர்.
தமிழினம் தனது வரலாற்றை அறியாமல் இன எழுச்சிபெற முடியாது, தனது உரிமைகளை வென்றெடுக்க முடியாது.
3. வரலாறுதான் இன அடையாளம்
இன அடையாளம் என்பது பிறப்பின் மூலம் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதல்ல, மொழியின் மூலமும் வருவதல்ல. அடையாளம் என்பது ஒருவர் சிறுவயதிலிருந்து வளரும்பொழுது கற்றுக்கொள்ளும் வரலாற்றின் மூலம் வருவது. கற்பித்தலின் மூலம் ஒருவரின் தேசிய அடையாளத்தை மாற்ற முடியும். உதாரணமாக இன்று ஈழத்தில் தமிழ் பேசும் இசுலாமியர்கள் வேறு ஒரு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தங்களை தனித்து அடையாளப்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் மீண்டும் பொதுவான தமிழர் வரலாற்றை ஏற்றால், அவர்கள் தங்களை தமிழர் என்று அடையாளப் படுத்துவார்கள்.
மொழிதான் அடையாளம், மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதெல்லாம் தவறான பார்வை. நாடற்று வாழ்ந்த காலத்தில் யூதர்கள் யூத மொழியை மறந்து போனார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் அடையாளத்தை வரலாறு மூலம் தக்கவைத்து மீண்டும் நாட்டை அடைந்தார்கள்.
அதேபோல இந்துத்வா ஆட்களின் வடமொழி பேச்சு வழக்கில் இல்லை. ஆனாலும் அவர்கள் தங்கள் அடையாளத்தை கட்டுக்கதைகள் (வரலாறு) மூலம் தக்க வைத்திருக்கிறார்கள். இன்று இந்து தேசியத்தை உருவாக்கப் போராடுகிறார்கள்.
வரலாற்றின் வீச்சு அதிகம். அது இரண்டாயிரம் ஆண்டுகளானாலும் குறையாது. ஒரு இனத்தின் வரலாறை மக்களின் மனதில் இருந்து அழித்தால்தான் அவ்வினம் அழியும்.
4. வரலாற்றால் மொழியைக் காக்க முடியும்.
யூதர்கள் தங்களின் மொழியை மறந்தாலும், இன்று நாட்டை அடைந்தபின் இறந்துபோன மொழியை உயிர்ப்பித்திருக்கிறார்கள். அதேபோல இந்துத்வாவும் முனைகிறது. இறந்துபோன வடமொழியை உயிர்ப்பிக்க ஏராளமான பணத்தைக் கொட்டுகிறது. இதற்கு காரணம் அவர்கள் தங்கள் வரலாற்றைத் தக்கவைத்து தங்களை அழியாமல் பாதுகாத்துக் கொண்டதால்தான், வரலாற்றால் இறந்துபோன மொழியையும் மீட்க முடியும்.
ஆனால் வரலாற்றைக் கற்பிக்காமல் மொழியை மட்டும் கற்பித்தால், மொழியும் அழியும் இனமும் அழியும். இன்று தமிழினம் இதுபோன்ற அழிவுப் பாதையிலே செல்கிறது. உதாரணமாக வட அமெரிக்கத் தமிழ் பாட நூல்களில், தமிழர் வரலாறு எதுவும் இல்லாமல் இந்திய வரலாறு இருக்கிறது. இதனால் என்ன பயன்?
புலம்பெயர் தேசங்களில் தமிழ் மொழி எப்படியும் சில தலைமுறைகளில் அழியும் வாய்ப்புகளே அதிகம். இன்று புலம் பெயர் சமூகங்களின் எவ்வளவு சதவீகித பிள்ளைகள் தமிழ் கற்கிறார்கள் பேசுகிறார்கள் என்ற புள்ளிவிவரமே இதை நிறுவப் போதுமானது.
வரலாற்றை அவர்களுக்கு சரியாக கற்பிப்பதன் ஊடாக அவர்களின் தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க முடியும் (உதாரணம் யூதர்கள்). அதன் மூலம் நமது எதிர்காலத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இல்லையென்றால் அந்த தேசங்களில் கரைந்து காணாமல் போவார்கள். இனம் அழியும்.
அதற்காக மொழியைக் கற்பிக்கக்கூடாது என்ற சொல்லவில்லை. முதலில் முக்கியமானது வரலாறு, அதன் பின்னர்தான் மொழி. புலம்பெயர் தேசங்களில் தமிழ்ப் பள்ளிகளின் முதன்மையான நோக்கம் என்பது வரலாற்றைக் கற்பிப்பதாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் இன்று தமிழ் படித்தால் போதும் என்று வரலாற்றை மறைக்கும் வேலைகள் நடக்கின்றன.
5. இருப்பதிலேயே மாபெரும் ஆயுதம் என்பது வரலாறுதான்
சிங்களம் நம்மை இனவழிப்பு செய்ததன் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அது மகாவம்ச கட்டுக்கதை வரலாற்றில் போய் நிற்கும். இதைத்தான் மகாவம்ச மனநிலை என்று தலைவர் கூறினார். மகாவம்ச புனைவுகளைப் பார்த்து நாம் சிரிக்கலாம். ஆனால் உண்மையில் அது சிங்களம் நம்மை அழிக்க காரணமாக இருக்கும் ஆயுதம். அதே போலவே இந்துத்வ புராண இதிகாச கட்டுக்கதைகளும் ஆயுதங்களே. வரலாறோ கட்டுக்கதையோ, அவை உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆயுதத்தின் உண்மை என்பது அதன் வீச்சில்தான் உள்ளது.
ஓர் இனம் தன்னைக் காத்துக்கொள்வதற்கான மிகப்பெரிய ஆயுதம் என்பது வரலாறும் கட்டுக்கதைகளும்தாம். அதை எதிரிகள் நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். தமிழினத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் என்பது புலிகளின் வரலாறுதான். எதிரிகள் தமிழினத்தை அழிக்க வேண்டுமானால் “புலிகளின் வரலாறு” என்ற மாபெரும் ஆயுதத்தை அழிக்காமல் நடக்கப்போவதில்லை. அதை செய்வதில் சிங்களம் குறியாக நிற்கிறது. அனைத்து துயிலும் இல்லங்களையும், புலிகளின் நினைவுச்சின்னங்களையும் அழித்தார்கள். புலிகளின் வரலாற்றை மக்களின் நினைவிலிருந்து அகற்றி அவ்வரலாறே இல்லாமல் செய்யவேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. அதை செய்து முடித்துவிட்டால் அவர்களின் வெற்றி நிரந்தரமாகிவிடும். அதேதான் தமிழகத்திலும் நடக்கிறது. இன்று அது புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களிடேயேயும் செய்யத் துடிக்கிறது. பிரபாகரனையும் புலிகளையும் எதிரிகள் கொச்சைப் படுத்துவதற்கு மறைப்பதற்கு காரணமும் இதுதான். ஏனெனில் தமிழின எழுச்சி என்பது புலிகளின் வரலாற்றால் மட்டுமே முடியும். வேறு எதுவாலும் முடியாது.
சிங்களம் எரித்த யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் கட்ட அனுமதித்தார்கள், நடத்துவதற்கான பொருளாதாரத்தையும் சிங்கள அளிக்கும். ஆனால் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்ட சிங்களம் அனுமதிக்குமா? அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பயப்படுவது தமிழ் மொழிக்கல்ல, புலிகளின் வரலாற்றுக்குத்தான்.
இறுதியாக ஒன்றே ஒன்றை புரிந்து கொண்டால் தமிழ்ச் சமூகம் பிழைக்கும். அது புலிகளின் வரலாறு ஒன்றுதான் நமது அடையாளத்தைக் காத்து, அழிவிலிருந்து மீட்டு, மொழியை மீட்டு, நாட்டை மீட்டு, நமது உரிமைகளை வெல்வதற்கான மாபெரும் ஆயுதம். அதுதான் புலிகள் நமக்களித்த மாபெரும் கொடை. இதை அடுத்த தலைமுறைக்கு சரியாக நாம் கொண்டுபோய் சேர்த்தால் அனைத்தும் சாத்தியப்படும். இல்லையென்றால் ஒன்றுமே சாத்தியப்படாது. திரிபு படுத்தப்பட்ட நூல்கள் திரும்ப பெற்று, உண்மையான வரலாற்றை எழுதி கற்பிக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.