இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்து மிக்க கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மூன்று ஊடகவியலாளர்கள் மீது மிக கடுமையான விசாரணைகள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தென்னிலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் செல்வக்குமார் நிலாந்தன் மீது மீண்டும் ஏறாவூர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.
இதேபோல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் இணைப்பு செயலாளருமான ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் மீதும் தொடர்ச்சியாக விசாரணைகள் நடைபெற்று அவருக்கு அண்மையில் மட்டக்களப்பு பொலிஸாரினால் பொய்யான தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இவ்வாறு இலங்கையில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அதிலும் மேற்கூறப்பட்ட ஊடகவியலாளர் மீது வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தரப்பினரால் பல்வேறு வகையாக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையின் அரச தரப்புக்களால் மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு எதிரான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார்கள் என்ற காரணத்திற்காகவே இவர்கள் பல தடவைகள் விசாரணைகள் என்ற போர்வையில் பாதுகாப்பு தரப்பினரால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடைசியில் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து தற்போது தென்னிலங்கையில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள் விசாரணைகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கட்டணங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் என்ற போர்வையில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவது தொடர்பாக யாரும் கவனம் செலுத்த வில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
தமிழ் ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் போது சிங்கள ஊடகங்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் குரல் கொடுப்பது குறைவு எனப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.