ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இலங்கையின் நண்பர்கள் என கருதுமாறும் கடினமான சந்தர்ப்பத்தில் இலங்கையை கைவிடாது தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே இதனை கூறியுள்ளனர்.
சர்வதேச சமூகம் இலகுவாக உதவுவதற்கான வழி
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக வழங்கப்படும் நிலையான செய்தியின் மூலம் சர்வதேச சமூகம், இலங்கைக்கு இலகுவாக உதவ முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கமத்தொழிலாளர்களுக்கு தேவையானதை வழங்கினால் பல பிரச்சினைகளை தீர்க்கலாம்
இங்கு கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கை சனத்தொகையில் 90 வீதமானோர் கிராமங்களில் வசிப்பதுடன் அவர்களில் 75 வீதமானோர் கமத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு தேவையான உரம்,எரிபொருள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, உணவு விநியோகம் சம்பந்மாகவும் தீர்வை காண முடியும் எனக் கூறியுள்ளார்.
கமத்தொழிலில் ஆர்வம் காட்டுவோருக்கு காணி பிரச்சினைக்கு தீர்வாக பயிரிடப்படாத அரச காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் போருக்கு பின்னர் ஏற்பட்ட மனிதாபிமான நிலைமையை கவனத்தில் கொண்டு நீடித்த தீர்வை வழங்கவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, எந்த சந்தர்ப்பத்திலும் அதில் தலையிடாது, பக்க சார்பின்றி நியாயமான முறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீடு, சுற்றுலாத்துறை, கல்வி உட்பட பல துறைகள் சம்பந்தமாக இதன் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சாய்பீ, பிரான்ஸ் தூதுவர் எரிக் லேவர்ட்டு,இத்தாலி தூதுவர் றீட்டா மெனேல்லா, நோர்வே தூதுவர் ட்ரீனா ஜோரன்லி, நெதர்லாந்து தூதுவர் தான்ஜா ஹோன்கிரிச், ஜேர்மனி தூதுவர் ஹொல்கர் லோத்தர் சோய்பர்ட்,ருமேனிய தூதுவர் கலாநிதி விக்டர் சியூடியா, துருக்கி தூதுவர் ரக்கிபே ஷெகர்ஜீஹோலு, சுவிஸர்லாந்து தூதுவர் டோமினிக் பேர்க்லர், ஜனாதிபதியின் ஊழியர் குழுவின் பிரதானி அனுர திஸாநாயக்க, அத்மிரல் ஜயநாத் கொழம்பகே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.