கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின் மீது குண்டு வீசுவதாக குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக கடிதம் ஒன்றை வைத்து சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியினால் கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
´கடந்த நவம்பர் 9ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், கடந்த தினம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு முன்னால் வந்த நபர் ஒருவர் கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரியிடம் கையளித்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவல்களை பேருந்து ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் பொலிஸ் மா அதிபர் ஒப்படைத்தார். குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து குறித்த சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.´