இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட முதல் குழுவாக திங்களன்று (13) ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
பணயக்கைதிகளின் நிலை குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
இஸ்ரேல் தற்போது பிடித்து வைத்திருக்கும் 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக மொத்தம் 20 உயிருள்ள பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல் குழு செஞ்சிலுவைச் சங்கத்தை அடைந்துவிட்டதாக இஸ்ரேலிய தொலைக்காட்சி அலைவரிசைகள் உறுதிப்படுத்தியபோது, பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
வரும் நாளில் காசாவில் பணயக் கைதிகள் விடுதலை, பாலஸ்தீன கைதிகள் விடுதலை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையை மேலும் அதிகரிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிராந்திய அமைதி உச்சிமாநாட்டிற்காக எகிப்துக்குச் செல்வதற்கு முன்பு திங்கட்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, 2023 ஒக்டோபர் 7 ஹமாஸ் தலைமையிலான போராளிகள் இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்று சுமார் 250 பேரை சிறைபிடித்ததிலிருந்து 737 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் திங்கட்கிழமை 20 உயிருள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணயக் கைதிகள் தெற்கு இஸ்ரேலில் உள்ள ரீம் தளத்தில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட பல பணயக்கைதிகளுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதால், செஞ்சிலுவைச் சங்க ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
இருப்பினும், இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்கள் ஒரே நேரத்தில் திருப்பி அனுப்பப்படுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.