எதிர்வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கோவிட்ட தொற்று மோசமடைந்துவரும் நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம் பொதுமுடக்கம் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்றினால் மிகவும் மோசடைந்துள்ள நிலையில் பொதுமுடக்கத்தை அறிவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், அந்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துவந்துள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கோவிட் திரிபுகள் உருவாகும் வரை பார்த்துக்கொண்டிராது, நாட்டை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நாட்டை முடக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் இதன்போது தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிகிழமைக்கு முன்னர், நாடு முடக்கப்படாத பட்சத்தில், திங்கட்கிழமை முதல் தொழிற்சங்கங்கள் நாட்டை முடக்குவதற்கு தயாராகவுள்ளதென தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சுகாதார துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் தமது கடமைகளை உரிய வகையில் முன்னெடுக்கும் அதேவேளை, ஏனைய அனைத்து துறைகளையும் சேர்ந்த தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு நாட்டை முடக்க நடவடிக்கை எடுப்பதாக சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.