எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், அண்மைய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
இஸ்ரேல் போர் நிறுத்தம் மற்றும் பிற நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து அறிவித்த ஒரு நாள் மற்றும் பிரான்ஸ் இதேபோன்ற திட்டத்தை வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் கனேடிய பிரதமரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
வரவிருக்கும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை கனடா முறையாக அங்கீகரிக்கும் என்று கார்னி கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களின் விரிவாக்கம், காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை மற்றும் 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் ஆகியவை கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் வியத்தகு மாற்றத்திற்குக் காரணங்களாக அவர் மேற்கோள் காட்டினார்.
எனினும், இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சு கனடாவின் அறிவிப்பை நிராகரித்ததுடன், இந்த அறிவிப்பு “ஹமாஸுக்கு ஒரு வெகுமதி” என்றும் கூறியது.
ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் பெரும்பாலான நாடுகள் (147) பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்துள்ளன.