சட்டக்கல்லூரியில் மட்டுமல்லாது, முன்பள்ளியில் இருந்தே இந்நாட்டின் கல்வி முறைமையை ஆங்கிலத்தில் கற்பிப்பதாக மாற்ற வேண்டும் எனவும், முன்பு சிங்களம் மட்டும் எனச் சொல்லப்பட்டதால் பல தலைமுறைகளுக்குப் பறிபோன சிறப்புரிமையை இத்தருணத்திலிருந்து மீண்டும் ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமானது எனவும், ஒரேயடியாக நடக்காமல் படிப்படியாக இது இடம் பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டக்கல்லூரியில் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்கள் தன்னை நேற்று (24) சந்தித்ததாகவும், பரீட்சைகளை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நீண்ட காலமாக சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஒரே தடவையில் ஆங்கிலத்தில் பரீட்சை நடத்துவது நியாயமற்றது என்பதால், சிறிது கால அவகாசம் எடுத்து இந்த முடிவை நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பொன்றை நடத்தாது, சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் உரிய முறைமைக்கும் அநீதி இழைக்காத வகையில் கலந்துரையாடல் மூலம் இதற்கு தீர்வு காணுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.