தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டு சந்தைக்கு டீசல் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படாது எனத் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டை மீண்டும் திறப்பது ஒக்டோபர் நடுப்பகுதி வரை தாமதமாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கடன் மேலாண்மை பிரச்சினைக்கு பதிலளித்த ஐ.தே.க தலைவர், நாட்டில் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பை நிவர்த்தி செய்வதே மிகவும் அழுத்தமான கவலை என்று கூறினார்.
பிராந்திய அந்நிய செலாவணி கையிருப்பு ஆண்டின்போது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு கீழ்நோக்கிய போக்கில் தான் உள்ளது.
சுற்றுலாத் துறையின் மீள் எழுச்சியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மீட்பு நிச்சயமற்ற நிலைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார், விமான டிக்கெட் விலைகள் குறைக்கப்படும் வரை, இலங்கை ஒரு பட்ஜெட் சுற்றுலா சந்தையாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மீண்டு வருவது சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.