சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது கொரோனா எனும் கொலைக்கார வைரஸ்.
அதன்பின்னர் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த வைரஸ் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவியது.
ஓராண்டை கடந்துவிட்ட போதிலும் உலக நாடுகள் இன்னும் கொரோனா வைரசுடன் போராடி கொண்டிருக்கின்றன.
இந்த கொடிய வைரசை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்கிற நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட பல வகையான கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் பலனாக வைரஸ் தொற்று பல மடங்கு குறைந்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் வயது வந்தோருக்கு, அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதே வேளையில் அமெரிக்கா கனடா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சீனா முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சினோவாக் கொரோனா தடுப்பூசியை 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்துவதற்கு நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில் உலகில் முதல் நாடாக கியூபா, 2 வயது முதலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கிய கியூபா, நேற்று முன்தினம் 2 வயது குழந்தை தொடங்கி 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கியுள்ளது.
எனினும் குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்கிற தகவல் வெளியிடப்படவில்லை.
கியூபாவில் தற்போது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அப்டாலா மற்றும் சோபேரானா ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபாவில் ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை விரைவாக திறப்பதற்காக குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பாக நாட்டில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த கியூபா அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சீனா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், கியூபா அதனை முதலில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.