உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தொடங்கினார்.
தெற்கு துறைமுக நகரமான பூசானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும்.
அத்துடன், இது தென் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல வர்த்தக முன்னேற்றங்களைப் பற்றிய ட்ரம்ப்பின் ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் விசேட பயணத்தின் இறுதிக்கட்டத்தையும் குறிக்கிறது.
சந்திப்பின் போது ஜியுடன் கைகுலுக்கிய ட்ரம்ப், நாங்கள் மிகவும் வெற்றிகரமான சந்திப்பை நடத்தப் போகிறோம், அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, இன்று நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று கூறினார்.
பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அவர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் அமர்ந்தபோது, உலகின் இரண்டு முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையில் அவ்வப்போது உரசல்கள் ஏற்படுவது இயல்பானது என்று ஜி ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் ட்ரம்பிடம் கூறினார்.
மேலும், சீனா-அமெரிக்க உறவுகளுக்கு உறுதியான அடித்தளத்தை அமைக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தொடர்ந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன் என்றும் அவர் மேலும் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு, இரு நாடுகளுக்கான வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஒருவருக்கொருவர் முதன்மை கசப்பான விடயங்களை நிவர்த்தி செய்வதில் அடிப்படை ஒருமித்த கருத்தை எட்டினர்.
இந்த முன்னேற்றத்தினால், உலகளாவிய வணிகத்தை உலுக்கிய வர்த்தக பதட்டங்கள் தணியும் என்று முதலீட்டாளர்கள் நம்பியதால், டொலருக்கு எதிராக சீனாவின் யுவான் நாணயம் கிட்டத்தட்ட ஒரு வருட உச்சத்தை எட்டியது.
வால் ஸ்ட்ரீட் முதல் டோக்கியோ வரையிலான உலக பங்குச் சந்தைகள் அண்மைய நாட்களில் சாதனை உச்சத்தை எட்டியுள்ளன.
ஆனால் இரு நாடுகளும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டித் துறைகளில் கடுமையாக விளையாடத் தயாராக இருப்பதால், எந்தவொரு வர்த்தகத் தடையும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன.
சீனா ஆதிக்கம் செலுத்தும் துறையான உயர் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு அவசியமான அரிய-பூமி தாதுக்களின் ஏற்றுமதியில் பெய்ஜிங் வியத்தகு முறையில் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த முன்மொழிந்ததைத் தொடர்ந்து இந்த மாதம் வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியது.
சீன ஏற்றுமதிகள் மீது கூடுதலாக 100% வரிகள் விதிப்பதன் மூலம் பதிலடி கொடுப்பதாகவும், அமெரிக்க மென்பொருளைப் பயன்படுத்தி சீனாவுக்கான ஏற்றுமதிகளில் தடைகள் விதிக்கப்படுவது உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றியிருக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் சபதம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

