கேழ்வரகு நல்லதொரு சிறந்த சிறுதானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ராகி மற்றும் கேப்பை. இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும்.
அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். கேழ்வரகு மட்டுமின்றி, கம்பு, மக்காசோளம், கோதுமை போன்றவற்றை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தார்கள். ஆனால் மற்றவையோடு ஒப்பிடுகையில் கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது.
கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு சிறந்த போஷாக்கும் அளிக்க கூடியது “சிறுதானியங்கள்” ஆகும். இந்த சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”.
எலும்பு தேய்மானத்திற்கு
வயதானால் எலும்புகள் தேய்மானமடைவது இயற்கை. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் வயதானவர்களுக்கும், 45 வயதை தாண்டிய மாதவிடாய் கடந்த பெண்களுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் குறையும், மேலும் இரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கவும் உதவுகிறது.
உடல் பருமனுக்கு
கேழ்வரகில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சரி செய்வதால் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் சமநிலை ஏற்பட உதவும்.
நீரிழிவு
கேழ்வரகை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். ராகில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைத்து, சீராக பராமரிக்கும்.
பற்கள் வலிமைக்கு
பற்கள் வலிமையிழந்து மஞ்சளாகவோ அல்லது வாய் துர்நாற்றமோ இருந்தால், வாரம் ஒருமுறை ராகி கூழ் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்களை வலிமையாக்கும். மேலும் வாய் துர்நாற்றம் வீசுவதும் நீங்கும்.
ஒவ்வாமைக்கு
ஒரு சிலருக்கு ‘க்லூடன் அலர்ஜி’ என கூறப்படும், கோதுமை முதலான உணவுப் பொருட்களால் உண்டாகும் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். கேழ்வரகில், ‘க்லூடன்’ இல்லாததால், இதை ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம்.