இந்திய மாநிலம் கேரளாவில் வீடு புகுந்து இளம் பெண் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தில் சட்டக்கலூரி மாணவர் சிக்கியுள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாலசந்திரன் என்பவரது மூத்த மகள் 21 வயதான திரிஷ்யா. இவரை அவருடன் படித்த பள்ளி நண்பர் வினீஷ் வினோத் ( 21) ஒருதலையாக காதலித்து வந்தார்.
திரிஷ்யா எங்கு சென்றாலும் அவரை வினோத் பின் தொடர்வது வாடிக்கையாக நடந்தது. இது குறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் பாலசந்திரன் பொலிசாரை நாடி புகார் அளித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் கடந்த 16ம் திகதி பாலசந்திரனின் கடைக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கடைக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் அறிந்து பாலச்சந்திரம் குடியிருப்பில் இருந்து வெளியேறிய நிலையில் வினோத் திரிஷ்யாவின் வீட்டுக்கு சென்று, மேல் மாடியில் இருந்த திரிஷ்யாவை மறைத்து வைத்து இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.
அதை தடுக்க வந்த திரிஷ்யாவின் சகோதரி தேவஸ்ரீக்கும் கத்திகுத்து விழுந்தது. திரிஷ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.
திரிஷ்யாவின் உடல் முழுவதும் 22 கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
தேவஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, தப்பிக்க முயன்ற வினோத்தை ஆட்டோ ஓட்டுனர் ஜவகர் என்பவர் சாமர்த்தியமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
வினோத் சட்டக்கல்வி படித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.