பல்லி நம்முடைய வீட்டில் இருந்தாலே அதிர்ஷ்டம் என்று கவுளி சாஸ்திரம் சொல்கிறது. பல்லியை எந்த நாளில் தரிசனம் செய்தால் எப்படி எங்கே பார்த்தால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்லியை கண்டாலே பலருக்கும் பயம்தான். சினிமாவில் பல்லியை பார்த்து கதாநாயகிகள் பயப்படுவது போல காட்சிகள் வைத்திருப்பார்கள்.
ஜோதிட ரீதியாக பல்லிகள் வீட்டில் இருந்தால் பண வருமானத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
நல்ல காரியத்திற்கு செல்லும் போதோ அல்லது சுப காரியம் பற்றி நினைக்கும் போதே பல்லி சத்தம் போட்டால் அந்த காரியம் வெற்றி பெறும் நம்பிக்கை பலருக்கும் உள்ளது.
பல்லியானது தலையில் விழுந்தாலே ஒருவித பதற்றம் வரும். பல்லி தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ வகையிலான நன்மை கிடைக்கும். முக பகுதியில் புருவம், கன்னத்தில், முகத்தில் விழுந்தால், சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம்.
உங்கள் புருவத்தின் மீது விழுந்தால், ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும்.
பல்லி மகாலட்சுமியின் அம்சம் என்று வட இந்தியர்கள் வணங்குகின்றனர். சிலரது வீடுகளில் பூஜை அறையில் வெள்ளியில் பல்லி செய்து வைத்து வணங்குவார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தங்க பல்லி இருப்பதை பலரும் பார்த்திருக்கலாம்.
இதே போல காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலில் தங்க பல்லி உள்ளது. இதனை தொட்டு தரிசனம் செய்து விட்டு வந்தால் நல்ல நிகழ்வுகள் நிகழும்.
நம்முடைய வீட்டின் வரவேற்பு அறையில் பல்லி இருந்தால் அது மகிழ்ச்சியையும் மங்களத்தையும் தரக்கூடியது என்று சொல்கின்றனர். பண வருமானம் அதிகரிக்குமாம். தடையின்றி பண வருமானம் வரும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை சேர்த்து பார்ப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டம். அதாவது, உங்கள் பூஜை அறையில் மூன்று பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் மங்களகரமான ஒரு விஷயம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சுப காரியம் கைகூடி வருமாம்.
நீங்கள் பல்லியை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்றால் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம். ஒருவரின் வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக கூறப்படுகிறது.
தீப திருநாளான தீபாவளி அன்று வீட்டில் பல்லியை பார்த்தால் ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள். அதே போல அட்சய திருதியை நாளில் பல்லி தரிசனம் கிடைப்பது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்குமாம்.
கோயில்களில் உள்ள தல விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம். அதேபோல் வீட்டின் நிலைவாசலில் பல்லியைப் பார்ப்பதும் மிகவும் விசேஷமான ஒன்று. பல்லி வீட்டில் இருப்பதினால் பயப்பட தேவையில்லை. அது அனைத்தும் நல்ல சகுனம் தான். இனிமேல் உங்கள் வீட்டில் பல்லியை பார்த்தால் அதனை அடித்து விரட்டாதீர்கள்.