தம்பதிகளுக்கிடையே வரும் சண்டைகளுக்கான தீர்வுகள் தான் திருமணமான அனைவரும் தேடித்திரியும் முக்கிய விஷயமாக உள்ளது. கல்யாணமாகும் முன் அல்லது கல்யாணமான பின் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பல சமயங்களில் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதுண்டு. அந்நேரங்களில் ஆண், பெண் இருவருமே தங்கள் இயல்பு நிலை மறந்து வார்த்தை போர் புரிவர்.
இதனால் சிறிதாக ஏற்படும் சச்சரவுகள் வளர்ந்து பெரிதாகும் வாய்ப்பு அதிகம். ஆகவே தம்பதி ஆகப்போகும் நபர்கள், திருமணமான தம்பதியர் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவசியம்.
தம்பதிகளுக்கிடையே வரும் சண்டைகளுக்கான தீர்வுகள்
கணவன் – மனைவி வாழ்வில் சச்சரவுகள் குறைந்து, இன்பம் நிறைய கீழ்க்கண்ட வழிமுறைகளை முயற்சியுங்கள்.
நேருக்கு நேர்
உங்கள் துணையிடம் பிடிக்காத அல்லது ‘இதை அவர் மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும்’ என்பது போன்ற விஷயங்களை அவரிடமே நேரடியாக கூறி விடுவது தான் மிகச்சிறந்த முறை.
இவ்வாறு நேருக்கு நேர் எல்லாவற்றையும் பேசி, கருத்துக்களை பரிமாறிக்கொண்டால் அங்கு வாதத்திற்கு இடமே இருக்காது. வாதம் இல்லாத இடத்தில் வாக்குவாதமும் நேராது.
குறை சொல்லாதீர்!
துணையிடம் இருக்கும் குறைகளை மட்டும் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டாம். அவரிடம் நிறைந்திருக்கும் நிறைகளையும் காணப் பழகுங்கள்.
குறை கூறி, குற்றம் சாட்டி எந்த ஒரு உறவையும் உறுதியாக உருவாக்க முடியாது – இதை உணர்ந்தால் வாழ்வில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை.
பொதுவாக்கம் தவிர்
எந்த ஒரு விஷயத்தையும் ‘எப்பொழுது பார்த்தாலும்’ அல்லது ‘எப்பொழுதுமே செய்ததில்லை’ என்று பொத்தாம் பொதுவாக கூற வேண்டாம். இவ்வாறு பொதுவாக்கம் செய்து பேசுவது வெறுப்பை மட்டுமே சம்பாதித்து தரும். உறவில் பாசம் பெருகி, பொதுவாக்கம் குறைய வேண்டும்.
1 = 1 =1 முறை
ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனையை பற்றி மட்டும் பேசி தீர்வு காணுங்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பற்றி விவாதிக்கும் பொழுது, அது மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கி விடும்.
எனவே 1 = 1 =1 முறையை பின்பற்றினால், ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை பேசி தீர்த்து ஒன்றாக வாழலாம்.
செவி சாயுங்கள்
எல்லா நேரத்திலும் “நான் கூறியதே இறுதி, எனது முடிவே உறுதி” என்று பாகுபலி சிவகாமி தேவி பாணியில் பேசாமல், துணையின் பேச்சைக் காது கொடுத்து கேளுங்கள். காது கொடுத்து கேட்டால் தான் பிறரின் மனநிலையை அறிந்து, அவரை புரிந்து கொள்ள முடியும்.
ஏற்க பழகுங்கள்!
துணையிடம் இருக்கும் குறையை சுட்டிக்காட்டுவது போல், உங்கள் மீது கூறும் குறைகளையும் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.
குறைகளை ஒருவர் சுட்டிக்காட்டும் பொழுது தான், நாம் வளர முடியும். எனவே துணை கூறும் குறைகளை, நிறைகளாக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.
Empathy முக்கியம்
ஒரு பிரச்சனையை பற்றி பேசும் பொழுது அல்லது ஒரு விஷயத்தை ஆராயும் பொழுது துணையின் இடத்தில்இருந்து யோசியுங்கள். அது உங்களின் கண்ணோட்டத்தை மாற்றி, உங்கள் பார்வைக்கு புது கோணத்தை அளிக்கும்.
ஆகவே, தன்னிலை துறந்து பிறர் நிலையிலிருந்து உணர்ந்து பார்க்கும் Empathy என்ற குணம் உறவில் மிக முக்கியம்.
கேலிப்பேச்சு கூடாது!
ஒரு விஷயத்தை சீரியசாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அங்கு உங்கள் நக்கல் நையாண்டி பேச்சுக்களை காட்டுவது நல்லதன்று.
கேலிப்பேச்சு பேச வேண்டிய இடம், பொருள் அறிந்து பேசினால் மகிழ்ச்சி பொங்கும். இல்லையேல் பிரச்சனை பெரிதாக உறவில் கசப்பு, மனதில் வருத்தம் மட்டுமே மிஞ்சும்.