தலைவர் பிரபாகரனின் பயோபிக் ‘மேதகு’. தமிழீழ திரைக்களம் தயாரிப்பில் இயக்குநர் கிட்டு இயக்கத்தில் ஓடிடி-யில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பிரபாகரன் பிறந்ததில் இருந்து அவருக்குள் அந்த புரட்சி உணர்வு வந்து புதிய தமிழ்ப்புலிகள் உருவான கதை வரை முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பிரபாகரனாக நடித்த நடிகர் குட்டிமணியின் நடிப்பு அனைவராலும் பாராட்டைப் பெற்றது. ‘மேதகு’ அனுபவம் குறித்து குட்டிமணியிடம் பேசினேன்.
இந்தப் படத்துக்குள்ள எப்படி வந்தீங்க ? ‘
‘சொந்த ஊர் சிவகங்கை. சின்ன வயசுல இருந்தே சினிமா மேல ஆர்வம் அதிகம். சின்னச்சின்ன குறும்படங்கள் நடிச்சுக்கிட்டிருந்தேன். ஏதாவது வாய்ப்பு கிடைச்சுடாதானு ஏங்கிட்டு இருந்த சமயத்துல என் நண்பர்தான் இந்த மாதிரி ஒரு படம் பண்றாங்கன்னு சொன்னார்.எனக்கு பிரபாகரன் அவர்களை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பத்தின படம்னு தெரிஞ்சதும் இதுல ஏதாவது ஒரு சின்ன கேரக்டர் கிடைக்காதானு என் போட்டோவை அனுப்பி வெச்சேன். கொஞ்சம் ஸ்டைலான போட்டோவா அனுப்பினதால அது சரியா இல்லை. என் நண்பர் அசார் இந்தப் படத்துல ஆர்ட் டைரக்ஷன்ல வேலை செஞ்சிருக்கார். அவர்தான் என்னை இயக்குநர் கிட்ட சொல்லியிருக்கார். இயக்குநர் என்னை க்ளீன் ஷேவ் பண்ணிட்டு வீடியோ கால் பண்ண சொன்னார். நானும் ஷேவ் பண்ணிட்டு போன் பண்ணேன்.
உடனே அவருடைய அசிஸ்டென்ட்ஸ்கிட்ட, ‘போய் தலைவரை கூட்டிட்டு வாங்க’ன்னு சொல்லியிருக்கார். தல, தலைவானு எல்லோரும் சும்மா சொல்ற மாதிரி சொல்றார்னு நினைச்சேன். ஆனா, அப்புறம்தான், தலைவர் பிரபாகரனா நடிக்கிறேன்னு தெரிஞ்சது. இப்படித்தான் நான் உள்ள வந்தேன்.’
நீங்கதான் பிரபாகரன்னு தெரிஞ்சதும் உங்களுக்கு என்ன தோணுச்சு ?
ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே சமயம், அதை எப்படி பண்ணப்போறோம்னு ரொம்ப பயமாவும் இருந்தது. அப்பழுக்கற்ற மிகப்பெரிய போராளியா நடிக்கும்போது மக்கள் எப்படி ஏத்துக்குவாங்கன்னு பயம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்துக்கு எந்த வகைலயும் சின்ன தீங்குக்கூட ஏற்படுத்திடக்கூடாதுனு நினைச்சேன். தமிழீழ திரைக்களத்துக்கு நான் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன்.
தமிழ் சார்ந்து, மண் சார்ந்து வரலாற்று படங்களை எடுக்க பயப்படுறவங்களுக்கு முதுகெலும்பா தமிழீழ திரைக்களம் இருக்கும்னு நம்புறேன்.’
இந்த கதாபாத்திரத்துக்கு மனரீதியாவும் உடல் ரீதியாவும் எப்படி தயாரானீங்க ?
2014-க்கு பிறகுதான், தலைவர் பிரபாகரனை பத்தின புரிதல் எனக்கு வந்தது. பிரபாகரன் பத்தியும் ஈழப் படுகொலை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன்.
அப்புறம், அவரைப் பத்தி நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அந்த சின்ன வயசுல எப்படி அவ்வளவு புரட்சிகரமா இருக்க முடியும்னு ஆச்சர்யப்பட்டிருக்கேன். உணர்வு ரீதியா என்னை அந்த கதாபாத்திரத்துக்கு தயார்படுத்திக்கிட்டேன். ரெண்டு மாசம் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.
ஜிம் போய் உடலை தயார் பண்ணேன். தினமும் படத்தோட வசனங்களை பேசிப்பேசி பழகணும். ஈழ தமிழ் எனக்கு பிடிக்கும். அதனால, எனக்கு ஈஸியா கத்துக்க முடிஞ்சது. உடல்மொழிக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. இயக்குநர்தான் அதை கொண்டு வரவெச்சார். அவருடைய வீடியோக்கள் பார்த்து எப்படி நடப்பார், நிப்பார், பார்ப்பார்னு கவனிச்சு கவனிச்சு பண்ணினேன்.
அதெல்லாத்துக்கும் இயக்குநர் கிட்டு அண்ணன்தான் காரணம்.”யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு கிடைச்சிருக்கு. முதன்முதல்ல ஒரு படம் நடிச்சிருக்கேன். அதுல நான் நடிச்சதைப் பத்தி எல்லோரும் பேசுறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெரிய பொறுப்புணர்ச்சியை கொடுத்திருக்கு. சினிமாவுல என்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளை சரியா எடுத்து வைக்கணும்னு நினைக்கிறேன்.’
திரையுலகத்துல இருந்து வந்த பாராட்டுகள் என்னென்ன ?
”நிறைய பேர் இயக்குநர்கிட்ட என்னைப் பத்தி பேசிருக்காங்க. வெற்றிமாறன் அண்ணன் ‘தம்பி நல்லா நடிச்சிருக்கான்’னு சொன்னதா இயக்குநர் சொன்னார். அவர் படத்துல நடிக்கணும்னு எத்தனையோ முறை ஆசைப்பட்டிருக்கேன். இப்போ அவரே என்னை பத்தி பேசும்போது அந்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.
.ஈழத்தமிழர்கள் படம் பார்த்தாங்களா… அவங்க என்ன சொன்னாங்க?
”படம் பார்த்தவங்க எல்லோரும் என் அண்ணனை காட்டிட்டீங்க, என் அப்பாவை காட்டிட்டீங்கன்னு சொல்றாங்க. என்னை ஈழத்துக்கு கூப்பிடுறாங்க. எனக்கும் தலைவர் வாழ்ந்த அந்த இடத்துக்கு போகணும்னு ஆசை. ஆனா, அது இனிமே சாத்தியமானு தெரியலை.”