உணவு ஒவ்வாமை காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலம் தேறி வருகின்றார் எனவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, நெதன்யாகு அடுத்த 3 நாட்கள் ஜெருசலேமிலுள்ள தனது இல்லத்திலிருந்தே அரசுப் பணிகளை மேற்கொள்வார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டதோடு, சமீபத்தில் ஹெர்னியா அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சுகாதார சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்றிருந்ததால், நெதன்யாகுவின் உடல்நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதேவேளை பெஞ்சமின் நெதன்யாகுவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவரது ஊழல் வழக்கின் நீதிமன்ற விசாரணை அமர்வும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

