ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் குவைட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் – ஹமாட் அல் – சபா (Sheikh Sabah Al – Hamad Al- Sabah) வுக்கும் இடையிலான சந்திப்பொன்று, 19 ஆம் திகதி முற்பகல், நியூயோர்க் மேன்ஹெட்ன்இல் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஐம்பது வருடகால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி நினைவூட்டிக்கொண்ட இரு தலைவர்களும், இந்தத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திக்கொண்டனர்.
இலங்கையர்கள் பலர் குவைட்டில் பணியாற்றுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிற்சிபெற்ற தொழிற்படையினருக்கு, மேலும் பல வாய்ப்புகளைத் திறந்துவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
கொவிட் தொற்றுப்பரவல் கட்டுப்பாடு மற்றும் நாட்டுக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி, தொற்றுப்பரவல் நீங்கி உலகம் திறக்கப்படும் போது, இரு தரப்புகளுக்கிடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ள உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில், குவைட் அரசாங்கத்தால் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும், குவேட் பிரதமருக்கு ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
உணவுப் பாதுகாப்பு, கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பிலும், இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.