வெளிநாடுகளில் எமது நாட்டின் கெளரவம் கடவுச்சீட்டிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் புதிய கடவுச்சீட்டில் 30 மற்றும் 31ஆம் பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களில் எழுத்து பிழை இருக்கிறது. இதனைக்கூட அவதானிக்காமல் இந்த கடவுச்சீட்டு அச்சிடப்பட்டிருக்கிறது. என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (28) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்த தெரிவித்த அவர், பழைய கடவுச்சீட்டில் முதலாம் பக்கத்தில் பாதுகாப்பு இலக்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது. முதலாம் பக்கம் அச்சிடப்படும்போதே அந்த இலக்கம் அச்சிடப்பட்டு வருகிறது. ஆனால் புதிய கடவுச்சீட்டில் அந்த பாதுகாப்பு இலக்கம் கடவுச்சீட்டின் தனிப்பட்ட தகவல் அடங்கி இருக்கும் பக்கத்திலேயே இருக்கிறது.
அதனால் குறித்த பக்கத்தை மாற்றியமைத்து மோசடிகளில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம். இது தொடர்பில் யாராவது நீதிமன்றம் சென்றால், அரசாங்கத்துக்கு இந்த கடவுச்சீட்டுக்களை நீக்க வேண்டி ஏற்படும்.
பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக பணம் செலுத்த வேண்டி உள்ளது.இவ்வாறு இன்னும் பல குறைபாடுகள் புதிய கடவுச்சீட்டில் காணப்படுகின்றன.
வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்றும் தொடர்ந்து வருகிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதமாகியும் இவற்றை திருத்த முடியாமல் போயிருக்கிறது என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.