இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவுக்கு மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கே (Ranil Wickremesinghe) ஆதரவு தர இருப்பதாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், ரணிலுக்கு போட்டியாகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகின்ற டலஸ் அழகப்பெரும (Dullas Alagaperumal) உடன் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaska) இருப்பதான ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த புகைப்படத்தில் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாபபா அபேவர்தன, ((Mahinda Yapa Abeywardena) கஞ்சன விஜேசேகர, அசங்க செகான் சேமசிங்க போன்றவர்களுடன் ஜனாதிபதி வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள டலஸ் அழகப்பெரும மற்றும் நாமல் ராஜபக்ஷ போன்றோரும் அமர்ந்திருந்து உரையாடுவது போன்று இருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இலங்கையின் பதில் ஜனாதிபதியாகச் செயற்பட்டு வருகின்ற ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியில் நிலைக்க வேண்டுமானால் மகிந்தவின் மொட்டுக் கட்சி அவருக்கான ஆதரவை வழங்கினால் மாத்திரமே அது சாத்தியம்.
ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) முன்மொழிந்தது போன்று டலஸ் அழகப்பெருமவுக்கு மொட்டுக்கட்சி ஆதரவு வழங்குமாக இருந்தால், ரணிலினால் அந்தப் பதவியில் நிலைப்பது மிகவும் கடினம்.
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் உலவிவருகின்ற இந்தப் புகைப்படம், மொட்டுக்கட்சி டலஸ் அழகப்பெருமவை அடுத்த ஜனாதிபதி தெரிவுக்கு முன்னிலைப்படுத்துகின்றதா என்கின்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது