2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி படுதோல்வி அடைத்தை தொடர்ந்து கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடி வருவதுடன் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்ததைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக ஒரு சிலர் அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதால், குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி அடைந்த நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதனை பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் செயற்குழு மற்றும் தெரிவுக்குழு பதவி விலக வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் செயற்குழுவை இராஜினாமா செய்யுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளர்கள் இருவர் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார்.